• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுவரெலியாவில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் – அனுஷா சந்திரசேகரன்

இலங்கை

மலையக மக்களின் உரிமைக் குரலாக ஐக்கிய ஜனநாயகக் குரல் நாடாளுமன்றில் முழங்கும் என அக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

உடபுஸ்ஸல்லாவை பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக்  குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில்  நுவரெலியா மாவட்டத்தில் ஒரு பெண் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளேன். மலையக மக்களின் உரிமைக் குரலாக, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை  நாடாளுமன்றத்தில் முழங்க நாம் தயாராக இருக்கின்றோம்.

மலையக மக்களுக்கு மாற்றமொன்றே தேவைப்படுகின்றது. கடந்த முறை சுயேற்சையாக இறங்கிய எனக்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற்றன. இந்த முறை அந்த வாக்குகள் பல மடங்குகளாக அதிகரிக்கும்  என நான் உறுதியாக நம்புகின்றேன்.

மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமன்றி ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கான குரலாக நாம் ஒலிப்போம். குறிப்பாக நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான குரலாகவும், இளைஞர்களுக்கான குரலாகவும் நாம் நிச்சயமாக இருப்போம்.

அதுமட்டுமல்லாது மலையக மக்களுக்குக்  கிடைக்கப்பட வேண்டிய  காணி உரிமைப் பத்திர பிரச்சினையை என்னால் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை நுவரெலியா மாவட்டத்தில்  அமைக்கப்படாத பல்கலைக்கழகங்கள் எம்மால்  அமைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” இவ்வாறு  அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply