எம்மால் உலகின் சிறந்த பாடத்திட்டத்தை உருவாக்க முடியும்
இலங்கை
கல்வித் துறையில் பணியாற்றுவோரின் சம்பளப் பிரச்சினை, பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், உலகின் சிறந்த கல்வி முறைமையைக் கொண்டுவந்தால் கூட பலனைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே பிரதமர் ஹரினி அமரசூரிய இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் கல்வி அமைச்சை பொறுப்பேற்று 6 வாரங்கள் ஆகின்றன. இதிலுள்ள பல பிரச்சினைகளை நான் இனங்கண்டுள்ளேன். ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நான் அவதானம் செலுத்தியுள்ளேன். இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.
எமக்கு உலகின் சிறந்த பாடத்திட்டத்தை உருவாக்க முடியும். தலைசிறந்த வல்லுனர்களை இதற்காகக் கொண்டுவந்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும். அனைத்து பாடசாலைகளிலும் ஸ்மாட் வகுப்பறைகளை உருவாக்கவும் முடியும். இதற்கு உதவிகளை செய்ய பலர் தயாராகவே உள்ளார்கள்.
சம்பளப் பிரச்சினை, பதவி உயர்வுப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்குமானால், உலகிலுள்ள சிறந்த கல்வி முறைமையைக் கொண்டுவந்தாலும் எம்மால் வெற்றி பெற முடியாது” இவ்வாறு பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.