100 கோடி கிளப்-இல் இணைந்த சிவகார்த்திகேயன்
சினிமா
தமிழ் சினிமாவில் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கு பிடித்தமான நடிகர்களின் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற போட்டி நிலவி வருகிறது. திரைப்படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என ரசிக்காமல் திரைப்படத்தின் வசூலை வைத்து மட்டுமே அப்படத்தின் வெற்றி முடிவு செய்யப்படுகிறது. திரையுலகில் வெளியாகும் திரைப்படங்களின் வெற்றி அதன் வசூலை வைத்தே நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
இது படத்தின் வெற்றியைத் தாண்டி அதற்கு காரணமாக அமைந்த படத்தின் நடிகர், இயக்குநர் மற்றும் படத்தில் பணியாற்றிய முன்னணி கலைஞர்களின் வருமானத்தை அதிகப்படுத்தும் அளவுகோலாகவும் மாறி வருகிறது. ஒன்றிரண்டு படங்களை ஹிட் கொடுத்தவர்கள் சினிமா லைம் லைட்டில் இருப்பதும், அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை உயர்த்திக் கொள்வதும் அனைவரும் அறிந்தது தான்.
அந்த வகையில், தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு வெளியான பல படங்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தோல்வியை சந்தித்தும், சில படங்கள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி மாபெரும் வெற்றிப் படங்களாகவும் மாறியுள்ளன. படத்தின் வெற்றி தோல்வி பல முயற்சிகளை கடந்து ரசிகர்கள் கையில் தான் இருக்கும். இந்த ஆண்டு தமிழ் திரையுலகிற்கு வசூல் ரீதியாக பெயர் சொல்லும் படம் அமையவில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது திரைத் துறை வல்லுநர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் 'அமரன்' பலரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றிப் படமாக மாறி இருக்கிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இத்திரைப்படம் உலகமுழுவதும் முதல்நாள் மட்டும் 42.3 கோடி ரூபாய் வசூலித்தது.
இது சிவகார்த்திகேயன் இதுவரை நடித்து வெளியான திரைப்படங்களில் மிகப் பெரிய ஓப்பனிங் கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படம் வெளியாகி மூன்றே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.மேலும் இது சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படமாகவும் மாறி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் சீயான் விக்ரம், விஜய் சேதுபதி, விஜய் ஆகியோர் திரைப்படங்கள் செய்த ஒரு விஷயத்தை தற்பொழுது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் செய்துள்ளது.
இது சினிமா துறையில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக திரைத்துறையை சேர்ந்த சிலர் சிவகார்த்திகேயன் அடுத்தக் கட்டத்திற்கு செல்கிறார் என்று மனம்திறந்து பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இது மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது.
தமிழ் சினிமாவில் இந்தாண்டு வெளியான திரைப்படங்களில் உலகளவில் வசூலில் 100 கோடி ரூபாய் கடந்த திரைப்படங்களின் பட்டியலை பார்ப்போம்.
சுந்தர் சி நடித்து, இயக்கி இந்த ஆண்டு வெளியான 'அரண்மனை 4' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வெளியாகி 25 ஆம் நாளில் 100 கோடி ரூபாய் வசூலில் கடந்தது. இப்படம் பேய் கதைக்களத்தை கொண்டிருந்தது. இப்படமே இந்தாண்டின் முதல் வணீக ரீதியாக வெற்றிப் பெற்ற திரைப்படமாக அங்கீகாரம் பெற்றது.
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் 50-வது திரைப்படமாக மகாராஜா திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. படம் வெளியாகி 15- வது நாளில் வசூலில் 100 கோடி ரூபாயை கடந்தது. ஓடிடியில் இத்திரைப்படம் வெளியான பின்பு உலகமெங்கும் மக்களால் கொண்டாடப்பட்ட படமாக மாறியது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியானது 'தி கோட்' திரைப்படம். இப்படம் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு விருந்து என்றே சொல்ல வேண்டும். திரையரங்கில் இப்படத்தை திருவிழாப் போல் கொண்டாடி தீர்த்தனர். இப்படம் வெளியாகி மூன்றே நாளில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்தது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் வெளியான படம் "வேட்டையன்". இந்தப் படம் வெளியான மூன்று நாட்களுக்குள் ரூ. 100 கோடி வசூலை கடந்து அசத்தியது. இந்தப் படத்தில் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்கள் வெளியான ஒன்றிரண்டு நாட்கள் அல்லது ஒரு வார காலத்தில் ரூ. 100 கோடி வசூலை கடந்த செய்திகள் இதுவரை திரையுலகின் முன்னணி நடிகர்களிடம் மட்டுமே நிலவி வந்தது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படமும் மூன்றே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து இருப்பது, அவரின் அடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பை தாண்டி, அவர் அடுத்தடுத்து நடிக்கப் போகும் படங்கள் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் சேர்த்தே எகிற செய்துள்ளது.