புகையிரத நிலைய அதிபர்களின் மற்றுமொரு எச்சரிக்கை
இலங்கை
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், தமது தொழிற்சங்க நடவடிக்கையின் மூலம் பயணிகளுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் நேற்யை தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன,
தமது தொழிற்சங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய பொறுப்பான அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
புகையிரத நிலைய அதிபர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, அதனைத் தீர்ப்பதற்கு புதிய அரசாங்கத்தின் நாடாளுமன்றம் தெரிவு செய்யப்படும் வரை கால அவகாசம் தேவை என தெரிவித்ததையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த பரபரப்பான நேரத்தில் அவர்கள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதனிடையே, புகையிரத பொது முகாமையாளர் குழுவொன்றை நியமிக்க தயாராகி வருகிறார். குழுவை நியமிப்பது நல்லது. பிரச்சினைகளைத் தவிர்க்கும் குழுக்களில் எங்களுக்குப் பங்கு இல்லை.
எதிர்வரும் திங்கட்கிழமை நிரந்தர தீர்வொன்றை புகையிரத பொது முகாமையாளரின் ஊடாக அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட வேண்டும்.
இல்லையேல், செவ்வாய்க்கிழமை முதல் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.