கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ரத்வத்த
இலங்கை
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று (02) இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லொஹான் ரத்வத்த, நுகேகொடை பதில் நீதிவான் வழங்கிய அனுமதியின் பேரில் சனிக்கிழமை (02) சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
நுகேகொடை மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவு செய்யப்படாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ரத்வத்த, கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி கண்டி, கட்டுகஸ்தோட்டையில் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.