”நாட்டில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது ஒழிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
தீபாவளி தினமான நேற்று வடிவேல் சுரேஸ், பண்டாரவளை, அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணிய தேவஸ்தானத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே வடிவேல் சுரேஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மலையகத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் மலையக்தில் தமிழ் பேசும் தமிழ் இளைஞர்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும்.
எங்களுடைய விகிதாசாரப்படி நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் 9 பேரே இருந்தனர். ஏனைய 7 ஆசனங்களும் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டன.
இந்த நாட்டில் வாழுகின்ற மக்களில் 7.5 வீதமான மக்கள் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே மொழியாற்றல் மற்றும் செயலாற்றல் கொண்டவர்கள் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.
இது ஒரு போராட்டக்களம். இந்தப் போராட்டக்களத்தில் தரகர்களை வைத்துக்கொண்டு பணத்தின் மூலம் எமது தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கச் செய்ய பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
குறிப்பாக எம் மக்களை அரசியல் அநாதைகளாக்க சில தீய சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. எனவே எமது மக்களிடம் நான் மிக முக்கியமாக கோரிக்கையொன்றை விடுக்கின்றேன். தயவு செய்து எமக்கு வாக்களியுங்கள். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ” இவ்வாறு வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.