மொத்தம் ரூ 119,522 கோடியை நன்கொடையாக அள்ளிக்கொடுத்த பெண்மணி... அவரது சொத்து மதிப்பு
பெண் நன்கொடையாளர்கள் தங்கள் தாராளமான பங்களிப்புகள் மூலம் உலகை கணிசமாக மேம்படுத்தி வருகின்றனர். கடந்த பத்தாண்டுகளில், பல முக்கிய நபர்கள் செல்வாக்கு மிக்க நன்கொடையாளர்களாக உருவெடுத்துள்ளனர்.
அதில் தனித்துவம் மிக்க நபராக, உலகம் மொத்தம் உற்று நோக்கப்பட்டவராக மாறியுள்ளார் MacKenzie Scott. உலகளவில் பெரும் கோடீஸ்வரப் பெண்மணியாக அங்கீகரிக்கப்பட்ட ஸ்காட் ஒரு நாவலாசிரியர் மற்றும் ஒரு நன்கொடையாளர், அவர் இன்றுவரை ரூ119,522 கோடிகளுக்கு மேல் நன்கொடை அளித்துள்ளார்.
மட்டுமின்றி, தன் வாழ்நாளில் தமது சொத்தில் பாதியையாவது நன்கொடையாக கொடுக்க வேண்டும் என்று வாக்குறுதியும் அளித்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் ஆரம்பகால ஊழியர்களில் ஒருவரான மெக்கென்சி ஸ்காட், அந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்து உலகின் மிகப்பெரிய நிறுவனமாக மாறியதைக் கண்டார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸிடமிருந்து விவாகரத்துக்குப் பிறகு, பில்லியனர் வரிசையில் அவர் பல இடங்கள் முன்னேறினார். ஸ்காட் - பெசோஸ் தம்பதி பிரிந்ததைத் தொடர்ந்து, ஸ்காட் ரூ 253,600 கோடி மதிப்புள்ள அமேசான் பங்குகளைப் பெற்றார்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஸ்காட்டின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 302,671 கோடி என தெரிய வருகிறது. 2019ல், தனது வாழ்நாள் முழுவதும் தனது சொத்தில் பாதியையாவது நன்கொடையாக வழங்க பொது உறுதிமொழியை அளித்தார்.
2020 முதல் இதுவரை சுமார் 1,600 இலாப நோக்கற்ற அமைப்புகளுக்கு ரூ 119,522 கோடி தொகையை நன்கொடையாக அளித்துள்ளார். 1970ல் கலிபோர்னியாவில் பிறந்த ஸ்காட், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
நியூயார்க் நகரில் பணியாற்றும் போது பெசோஸை சந்தித்த ஸ்காட், 1993ல் அந்த நட்பு திருமணத்தில் இணைந்தது. அதன் பின்னர் இருவரும் சியாட்டிலுக்கு இடம்பெயர முடிவு செய்ததுடன், அமேசான் நிறுவனத்தையும் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.