• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பணம் கொடுத்து மக்களை ஒன்றுதிரட்ட வேண்டிய தேவை எமக்குக் கிடையாது -ரஞ்சன் ராமநாயக்க

இலங்கை

ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் வெற்றிப்பயணத்தினை பொருத்துக்கொள்ள முடியாத சிலரினால் அவதூறு ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதனை தாம் வன்மையாகக்  கண்டிப்பதாகவும் கட்சியின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் முதலாவது மாநாட்டிற்கு பணம் கொடுத்து மக்கள் வரவழைக்கப்பட்டிருந்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்த நிலையில் அந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகசந்திப்பு ஐக்கிய ஜனநாயக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன் போது கருத்துத் தெரிவித்த  ரஞ்சன் ராமநாயக்க ”9 மாவட்டங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் வருகைதந்திருந்தனர். நாம் எதிர்ப்பார்த்தைவிட அதிகளவான ஆதரவாளர்கள் வருகைதந்தனர்.

மாநாடு மிகவும் வெற்றிகரமான முறையில் இடம்பெற்றது. இறுதியில் சில குழப்பகரமான சம்பவங்கள் இடம்பெற்றதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

உண்மையிலேயே இந்த மாநாடு அன்றைய தினம் வெற்றிகரமாக இடம்பெற்றது. எமது வெற்றியினை பொருத்துக்கொள்ள முடியாத சிலரினால் தற்போது அவதுறு ஏற்படுத்தும் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதாவது நாம் பணம் கொடுத்தே அன்றைய தினம் மாநாட்டிற்கு மக்களை வரவழைத்திருந்ததாக தகவல் வெளியானது.

இந்த மாநாடு 26 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனவே நான் எமது ஆதரவாளர்களுக்கு அதனை அறிவிக்கும் வகையிலும் எமது கட்சியின் கொள்கைகளுக்கு இணங்கி செயற்படுபவர்களுக்கு அதனை தெரியப்படுத்தும் முகமாகவும் திறந்த அழைப்பினை விடுத்து எனது பிரத்தியேக முகநூல் பக்கத்தில் அதுதொடர்பாக பதிவு செய்திருந்தேன்.

அதனை விடுத்து பணம் கொடுத்து மக்களை ஒன்றுதிரட்ட வேண்டிய தேவை எமக்கு ஏற்படவில்லை. இந்த விடயம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே நான் தற்போது அதனை தெளிவுபடுத்தியுள்ளேன்.

2000 ஆயிரம் ரூபா பணமும் சோற்றுப்பொதியொன்றையும் கொடுத்து மக்களை மாநாட்டிற்கு வரவழைக்க வேண்டிய தேவை எமக்கு ஏற்படவில்லை.

களனிபல்கலைக்கழக மாணவர்களுக்கு பணம் வழங்குவதாக கூறி அவர்களை மாநாட்டிற்கு வரவழைத்திருந்ததாகவும் பின்னர் பணம் கொடுக்காமையினால் அவர்கள் மாநாடு இடம்பெற்ற மண்டபத்தினை தாக்கி சேதப்படுத்தியதாக வெளியான தகவலும் முற்றிலும் பொய்யானது.

இவ்வாறான செயற்பாடுகள் பல்கலைக்கழக மாணவர்களை இழிவுபடுத்தும் விடயமாகும். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply