நாடாளுமன்றத்தில் நாம் பலமான எதிர்க்கட்சியாக மாற்றமடையவேண்டும் -ரஞ்சன் ராமநாயக்க
இலங்கை
நாடாளுமன்றத்தில் நாம் பலமான எதிர்க்கட்சியாக மாற்றமடைவதற்கு மக்களின் ஆதரவு வேண்டும் ” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் முதலாவது பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எம்மிடம் சிலர் எதற்காக புதியக் கட்சியை ஸ்தாபித்தீர்கள் என்று கேட்கிறார்கள். கடந்த காலங்களில் நான் எனது வாழ்க்கையில் பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்தேன். ஒரு வருடமும் 8 மாதங்களும் நான் சிறையில் இருந்தேன். கொலை செய்தோ, திருடியோ, போதைப்பொருள் கடத்தியோ, பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியோ சிறைக்குச் செல்ல வில்லை. நான் எதற்காக சிறைக்குச் சென்றேன் என்பதை அனைத்து மக்களும் அறிவார்கள்.
நான் அங்குணுகொலபொலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டேன். அங்கு ஜே.வி.பி. மாநாட்டில் தாக்குதல் நடத்திய நாமல் ராஜபக்ஸவின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவருடன்தான் இருந்தேன். என்னை சிறைச்சாலையிலேயே கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்கள். நான் அந்த சிறைச்சாலையில் பெரும் சிரமங்களுக்கு உள்ளானேன். கொரோனா காலம் என்பதால், என்னை பார்க்க உறவினர்களுக்குக்கூட அனுமதியில்லை.
நான் வெளியே வந்தவுடன் பலரும் மீண்டும் நான் அரசியலுக்கு வருவேனா என்று கேட்டார்கள். அந்த மக்களின் கோரிக்கைக்கு இணங்கத்தான் நான் தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன். திருடர்கள் இருக்கும் கட்சியில் இருக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆனால், அவர்கள் இருக்கும் அதே நாடாளுமன்றத்தில் நாம் பலமான எதிர்க்கட்சியாக மாற்றமடையவேண்டும். இதற்கு மக்கள் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
நாம் இன்று தூய்மையானவர்களுடன் இணைந்து எமது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். எனவே, நாம் போட்டியிடும் 9 மாவட்டங்களிலும் பெரும் வெற்றி பெற வேண்டும். நான் சிறைக்குச் சென்று வந்த பின்னர் பல நாடுகளுக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தோம். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் சுதந்திரத்திற்குமுன்னர் எம்மை விட பின்தங்கிய நிலையில் இருந்தன. ஆனால், இந்த நாடுகள் எல்லாம் இன்று எங்கோ சென்று விட்டன.
நான் எந்தவொரு காலத்திலும் கொள்ளையடித்தது கிடையாது. அத்தோடு, நான் திருமணமும் செய்துக் கொள்ளவில்லை. எனவே, நான் சொத்துக்களை எனது குடும்பத்திற்காக சேர்க்க வேண்டிய தேவை இல்லாத காரணத்தினால்தான் பலரும் எனக்கு உதவிகளை செய்ய முன்வந்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சிறியதொரு அறிவிப்பைத்தான் விடுத்தேன். ஆனால், இதனைக் கேட்டு பிரதான கட்சிகளுக்கு பொறுத்துக் கொள்ள முடியாதுள்ளது. இதனால்தான் எனக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தனை பேர் இருக்கும்போது, எனக்கு எதிராக மட்டும் ஏன் இவ்வாறு செயற்பட வேண்டும். காரணம், நான் கசப்பான உண்மைகளை கதைப்பதால் தான்….
எனது மாமாவான விஜயகுமார துங்க அரசியலுக்கு வந்தபோதுகூட, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் அஞ்சினார். அவருக்கு நக்சலைட் என்று முத்திரைக் குத்தி 3 மாதங்கள் சிறையிலும் அடைத்தார்கள். ஏன் இப்படி அஞ்ச வேண்டும்?
நான் எந்தவொரு சட்டவிரோத செயற்பாட்டிலும் ஈடுபட வில்லை. எனினும், நாம் அரசியல் திருடர்களுக்கு பாரிய சவாலாக மாறியுள்ளமையால்தான் எனது அரசியல் பயணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று இவர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள்.
நான் மக்களின் நண்பன். எனவே, மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை ஒருபோதும் மேற்கொள்ள மாட்டேன். எமது கட்சி மீது நம்பிக்கை வையுங்கள். குரல் இல்லாதவர்களின் குரலாக எமது கட்சி ஒலித்துக் கொண்டிருக்கும்” இவ்வாறு ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.