TamilsGuide

கைவிடப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை திட்டம்

இலங்கையின் புதிய அரசாங்கம் கடனில் சிக்கியுள்ள தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டுள்ளது, ஆனால் அதிக இலாபகரமான எதிர்காலத்திற்காக அதனை மறுசீரமைக்க தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொடவை மேற்கோள் காட்டி TTG Asia இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

எல்லா இலங்கையர்களும் பெருமைப்படும் ஒரு நிறுவனமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இருக்க வேண்டும், அது இலங்கையர்களுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

பல ஆண்டுகளாக ஏகப்பட்ட நஷ்டத்தை சந்தித்து வரும் விமான நிறுவனத்தை பகுதி-விற்பனை மற்றும் நிர்வகிப்பதற்கான ஏலங்களுக்கு முந்தைய அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் விமான நிறுவனம் செயல்பாட்டு இலாபத்தைப் பதிவு செய்திருந்தாலும், அதன் கடன் தொகை 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

முந்தைய திட்டத்தின் கீழ், அரசாங்கம் விமானத்தின் 51 சதவீத கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், மீதமுள்ள 49 சதவீதத்தை முதலீட்டாளர்களுக்கு விற்க வேண்டும். இதற்காக ஆறு தரப்பினர் முன்வந்தனர்.

எனினும் கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த இடதுசாரி அரசியல்வாதி அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றார்.

கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டு வந்த அரச சொத்துக்களை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அவர் சபதம் செய்திருந்த அவர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உட்பட நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை விற்பனை செய்யும் முன்னைய அரசாங்கத்தின் திட்டத்தை விரைவாக நீக்கினார்.

இந்த விமான சேவையானது இலங்கையின் சுற்றுலாத்துறையின் முக்கிய தூணாகவும், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் 50 சதவீதத்திற்கும் பொறுப்பாகும் என்றும் சரத் கனேகொட TTG Asia செய்திச் சேவையிடம் கூறியுள்ளார்.
 

Leave a comment

Comment