TamilsGuide

காசா குழந்தைகளின் அவல நிலை.. தவிக்கும் தாய்மார்கள்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 41,500 பேர் உயிரிழந்துள்ளனர். 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த வருடம் இதே நாளில் [அக்டொபர் 7] ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்க இஸ்ரேல் போரைத் தீவிரப்படுத்தியது.

ஆனால் இந்த போரில் உயிரிழந்த பால்ஸ்தீனியர்களின் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். காசாவில் வாழ்ந்த சுமார் 23 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மனித உரிமை உதவிகள் எட்டாத துண்டிக்கப்பட்ட பிரதேசமாகக் காசா திகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் வீசும் குண்டுகளை விட உணவுத் தட்டுப்பாடும் சுகாதார சீர்கேடுமே அம்மக்களின் கொடுங்கனவாக மாறியுள்ளது. கை, கால்களை இழந்த சிறுவர் சிறுமியரின் புகைப்படங்கள் காண்போர் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளன

குழந்தைகள், கர்ப்பிணிகள் மருத்தவ உதவிகள் கிடைக்காமலும், பட்டினியால் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவும் அவதிப்பட்டு வருகிறனர். இந்த அசாதார சூழ்நிலையில் குழந்தையை பிரசவிக்கும் தாய்மார்கள் நிர்கதியில் விடப்பட்டுள்ளனர்.

சொந்த நாட்டில் அகதியாக மத்திய காசாவில் டெய்ர் அல் பாலாஹ்[Deir al-Balah] பகுதியில் டென்ட் முகாம் ஒன்றில் கையில் தனது ஒருமாத பெண்குழந்தை மிலானா [Milana] - வை ஏந்தியவாறு பேசும் ராணா சாலா [Rana Salah] என்ற தாய், இவளை [குழந்தையை] இந்த போருக்கும், துன்பத்துக்கும் மத்தியில் பெற்றது என்னை குற்றவுணர்வில் தள்ளியுள்ளது. முடிவெடுக்கும் உரிமை எனக்கு இருந்திருந்தால் நான் இவளை பெற்றிருக்கவே மாட்டேன்.

இதற்கு முன் நாங்கள் இது போன்றதொரு அவலம் நிறைந்த வாழ்க்கையைக் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. நான் இந்த குழந்தைக்கு துரோகம் செய்வதாகவே உணர்கிறேன். இதை விட மேம்பட்ட சூழலில் இவள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சாலா வாழும் இதே டெய்ர் பகுதியில் மருத்துவமனை அருகில் இடம்பெயர்ந்தோர் தஞ்சமடைந்த மசூதி மற்றும் பள்ளி மீது நேற்று அதிகாலை இஸ்ரேல் குண்டுகளை வீசியது.

அதில் 26 பேர் உயிரிழந்தனர். 93 பேர் படுகாயமடைந்தனர். ஐநா குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின்[UNICEF] அறிக்கைத் தரவுகளில் படி சாலாவின் குழந்தை மிலானா காசாவில் கடந்த ஒரு வருடத்தில் போருக்கு மத்தியில் பிறந்து அவதிப்படும் 20,000 குழந்தைகளில் ஒருவள் ஆவாள்.

கணவனை இழந்து தனியே குழந்தையை தூக்கிக்கொண்டு குண்டுகளுக்கு பயந்து முகாம்களுக்கு முகாம் இடம்மாறி வரும் தாய்மார்கள் காசாவின் துயரத்துக்கு சாட்சிகளாக உள்ளனர். தற்கொலை எப்படி எதற்கும் தீர்வாக இருக்காதோ அதுபோல போர்களும் எதற்கும் தீர்வு கிடையாது என்பதை ஆயுதங்களை கொண்டாடும், வியாபாரம் செய்யும் மரண வியாபாரிகள் மக்களிடம் இருந்து மறைத்து வருகின்றனர். 'ஆயுதம் வாங்குற காசுக்கெல்லாம் அரிசி வாங்கியிருந்தா?' என்ற 'தம்பி' பட வசனமே தற்போதைய சூழலுக்கு பொருத்தமானதாக இருக்கக்கூடும்.
 

Leave a comment

Comment