TamilsGuide

மக்கள் என்னை புறக்கணித்தாலும், மக்களை என்னால் புறக்கணிக்க முடியாது

”ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம். அதுவே இயலும் ஸ்ரீலங்கா” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு, கிரேண்பாஸ் கொஸ்கா சந்தியில் நேற்று இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்‘ என்ற இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஒரு சவாலை வெற்றிக்கொள்ளும் போது மற்றொரு சவால் வரும். வாழ்க்கையில் வெற்றித் தோல்விகள் இருக்கும். இவ்வாறான நிலையிலேயே நான் ஆட்சி பொறுப்பை ஏற்றேன்.

மக்கள் என்னை புறக்கணித்தாலும் மக்களை என்னால் புறக்கணிக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவரும் அநுரகுமாரவும் உங்களை புறக்கணிப்பதற்கு தைரியம் இருந்தது. இது புதிய அரசியலாகும்.

நீங்கள் அனைவரும் எரிவாயு, எரிபொருள், உரம் என எதுவும் இல்லாமல் இருந்தீர்கள். நாடு வங்குரோத்து அடைந்த போதே நாட்டை பொறுப்பேற்றேன்.

ஆனால், மக்களை வாழ வைப்பதே என்னுடைய முதல் நோக்கமாக இருந்தது. அடுத்த வருடத்திலும் நான் வாழ்க்கை சுமையை குறைப்பேன்.

இலங்கை தற்போது வங்குரோத்து நிலையில் இருந்து நீக்கப்படும். இனி எங்களால் மீண்டுவர முடியும். அதனையே இயலும் ஸ்ரீலங்கா எனக் கூறுகிறோம். பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களை பலப்படுத்த வேண்டும்.

உங்களுடைய மேசையில் உணவுகள் இருக்க வேண்டும். அதனை விடுத்து இரு வேலையும் உணவுகள் இல்லாதிருக்க முடியாது.

எந்த நாளும் பிச்சை எடுத்து உண்ண முடியாது. இலங்கை பிச்சை எடுக்கும் நாடல்ல.  இனியும் எங்களால் இவ்வாறு இருக்க முடியாது.

எங்களுக்கு பலமான நாடு வேண்டும். எங்களால் முடியும். அதுவே இயலும் ஸ்ரீலங்கா. நாங்கள் வெற்றிபெறுவோம். அதற்கு 21 ஆம் திகதி சிலிண்டர் சின்னத்துக்கு முன்னால் புள்ளடி இடுங்கள்” இவ்வாறு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
 

Leave a comment

Comment