TamilsGuide

லெபனானில் ஹிஸ்புல்லாவினர் பேஜர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு - 8 பேர் பலி - 2,750 பேர் படுகாயம்

லெபனானில் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்த தகவல் பரிமாற்ற கருவிகளான பேஜர் கருவிகள் நூற்றுக்கணக்கில் அடுத்தடுத்து வெடித்ததில் 2,570 க்கும் மேற்பட்டோர் வரை படுயாகம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த வெடிவிபத்துகளில் லெபனானுக்கான ஈரான் தூதுவர் மொஜிதபா அமானி -யும் படுகாயமடைந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலரது பாக்கெட்டுகளில் இருந்த கையடக்க பேஜர்கள் முதலில் வெடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துள்ளன.

இதுவரை தாங்கள் சந்தித்த மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இது என்றும் இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பாலஸ்தீன போரில் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனான் எல்லையிலிருந்து இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் பேஜர்கள் வெடிக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படுகாயமடைந்தார்களின் நிலை குறித்த தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை.


 

Leave a comment

Comment