• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிரம்பை கொலை செய்ய 12 மணி நேரமாக கோல்ப் மைதானத்தில் காத்திருந்த தொழில் அதிபர்- பரபரப்பு தகவல்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களம் இறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவின் வெஸ்ட் பாம் கடற்கரை பகுதியில் உள்ள கோல்ப் மைதானத்தில் கோல்ப் விளையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது டிரம்ப் நின்றிருந்த இடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் மர்ம நபர் ஒருவர் ஏ.கே.47 துப்பாக்கியால் டிரம்பை நோக்கி வேலி வழியாக குறிபார்த்துக்கொண்டு இருந்தார்.

இதை கண்ட டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதையடுத்து அந்த மர்ம நபர் அங்கிருந்து காரில் தப்பி சென்றார். எனினும் சற்று நேரத்துக்குள்ளாக போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் ஹவாய் மாகாணத்தை சேர்ந்த ரியான் வெஸ்லி ரூத் (வயது 58) என்பதும், அவர் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் என்பதும் தெரிய வந்தது.

எனினும் எதற்காக அவர் டிரம்பை கொலை செய்ய முயற்சித்தார் என்பது தெரியாத நிலையில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே ரியான் வெஸ்லி ரூத், டிரம்பை கொலை செய்வதற்காக சுமார் 12 மணி நேரம் கோல்ப் மைதானத்தில் காத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுப்பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

ரியான் வெஸ்லி ரூத் கோல்ப் மைதானத்தில் இருந்து தப்பி ஓடும்போது ஒரு டிஜிட்டல் கேமரா, கைத்துப்பாக்கி உள்ளிட்டவை அடங்கிய பையை விட்டு சென்றார். அந்த பையில் சில உணவுகளும் இருந்தன. இதன் மூலம் அவர் வெகு நேரம் கோல்ப் மைதானத்தில் காத்திருந்தது தெரிந்தது. அந்த வகையில் அவர் கோல்ப் மைதானத்தில் உள்ள ஒரு மரத்துக்கு அடியில் கிட்டத்தட்ட 12 மணி நேரமாக காத்திருந்தது அவரது செல்போன் தரவுகள் மூலம் தெரியவந்தது.

டிரம்பின் வருகைக்காக காத்திருத்த ரியான் வெஸ்லி ரூத், அவர் தனது பார்வைக்கு நேராக வந்ததும் துப்பாக்கியால் சுடுவதற்கு தயாரானார். நல்வாய்ப்பாக பாதுகாப்பு படையினர் அவரது சதியை முறியடித்தனர்.

ரியான் வெஸ்லி ரூத்தின் குடும்பத்தினர், நண்பர்கள், அவருடைய கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் ரியான் வெஸ்லி ரூத்தின் சமூக வலைத்தள கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் ரியான் வெஸ்லி ரூத் கடந்த காலங்களில் சமூக வலைத்தளத்தில் டிரம்பை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டது தெரியவந்துள்ளது. கொலை முயற்சிக்கான காரணத்தை அறிய தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
 

Leave a Reply