TamilsGuide

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தை ஆராய்ந்து அதனை அம்பலப்படுத்துவேன்

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளுக்கு தமது அரசாங்கத்தில் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வாக்குறுதி வழங்கியுள்ளார்.

நேற்று புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு
பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உடந்தையான, தீவிரவாதிகளுக்கும், மிலேச்சத்தனமான சூத்திரதாரிகளுக்கும் நிச்சயமாக தண்டனை வழங்குவோம்.

தலைமறைவாகியுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி வழங்கப்பட வேண்டிய அதிகபட்ச தண்டனையை வழங்குவோம். தற்போதுள்ள பதில் ஜனாதிபதியும் இந்த தாக்குதலுக்காக நீதி நியாயத்தை நிலை நாட்டுவதாக கூறினார். ஆனால் அவர் அதனை நிறைவேற்றவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவும் ரணிலும் உண்மையை திட்டமிட்டு மறைத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு எவருடனும் டீல் கிடையாது. எனவே இந்த உண்மையை வெளிப்படுத்துவோம்.

சஜித் பிரேமதாச என்பவர் பணத்திற்காகவும், பதவிகளுக்காகவும், வரங்களுக்காகவும் விலை போகின்றவர் அல்ல. நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களின் நம்பிக்கையை வென்றவராகவே நான் உள்ளேன். எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தை ஆராய்ந்து அதனை வெளிப்படுத்துவோம்” இவ்வாறு சஜித் பிரேமதாச வாக்குறுதி வழங்கியுள்ளார்.
 

Leave a comment

Comment