• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிம்மத்திற்கு ஒரு குரல் சிவாஜிக்கு நூறு குரல்...

சினிமா

அவர் குரலில் எப்போதும் கம்பீரம் மிளிரும்.ஒவ்வொரு கால கட்டமாக
அந்தக் குரலில் என்னவெல்லாம் மாற்றங்கள் உருவாகின.
நாடக வேஷங்களும் அதற்கேற்ற குரல்களையும் சிறு வயதில் இருந்தே தீவிரமாக செய்து வரும் நிலையில் திரைப்படங்களில் நடிக்கும் போது ஆரம்பத்தில் தடுமாற்றங்கள் வரலாம்.அதையெல்லாம் கவனமாக விலக்கி வெற்றிகள் என்ன? பெரும் அதிசயமாகவே மாற்றிக் காட்டியவரின் நிகழ்வுகளில் இருந்து .....
பராசக்தியில் இளமையும் இல்லாத முதிர்வும் இல்லாத குரல்.அடுத்து வந்த
மனோகரா, அந்தநாள், தூக்குதூக்கியில் கொஞ்சம் இளமை கூடியது போல் குரல்கள்.உத்த புத்திரன் வரை இது தொடர்ந்தன.பதிபக்தியில் உடல்வாகில் சிறிது மாற்றம்.சிறிது பூசியது போன்று உடலமைப்பு.குரலிலும் சிறிது மாற்றம்.
இந்த வகையிலே நான் சொல்லும் ரகசியம் வரை அமைந்திருந்தன.ஆனால் அடுத்தபடத்திற்குள் என்ன மாயம் செய்தாரோ?
வீரபாண்டிய கட்ட பொம்மனில் இருந்து சிம்மக்குரல் புறப்பட்டு விட்டது.ஆச்சர்யம் போல் பதிபக்தியில் அவருடைய உடலமைப்பும் கட்டபொம்மனில் அவருடைய உடலமைப்பும் வித்தியாசம் காட்டியது.
அடுத்து பாகப்பிரிவினையில் அதற்கு முன் இல்லாத உடலமைப்பு.இப் படத்தில் குரல்
இதற்கு முன்பு வந்த படங்களில் இருந்து வேறு விதமாய் இருந்தது.
இதற்கு அடுத்ததாக வந்த இரும்புத்திரையில் இருந்து மருத நாட்டு வீரன் வரை இப்பாணி கையாளப் பட்டது.ஆனாலும் பாத்திரங்களின் தன்மைகளுக்கு ஏற்றவாறு தன் குரலில்
பேசி வந்தார்.பாலும் பழத்தில் அதையே மென்மையாக பேசி ஆச்சர்யம் காட்டினார்.
அடுத்து வந்த கப்பலோட்டிய தமிழனில்
இன்னும் வசீகரம்.எப்படி இப்படியெல்லாம் என்ற வியப்புகளே நம்மை ஆட்கொள்கிறது.
பார்த்தால் பசி தீரும் படத்திலே ராணுவ காட்சிகள் பகுதியில் ஒரு வகையாகவும், பின் பகுதியில் வேறு வகையாகவும் பேசியிருப்பார்.
உடல்வாகு கூட பாகப்பிரிவினையில் இருந்து எல்லாம் உனக்காக வரை சிறிய சிறிய மாற்றங்களுடன் காட்சியளிப்பார்.
பாலும் பழத்தில் இவைகளில் இருந்து சற்று மாறுபட்டு தோற்றம் தருவார்.தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கையிலே இவைகள் எல்லாம் எப்படி சாத்தியமாயின என்று வியப்பு தான் வருகிறது.நிச்சய தாம்பூலத்தில் பொதுவான குரலிலும், படித்தால் மட்டும் போதுமாவில் முரட்டுக் குரலிலும் நடித்திருப்பார்.நிச்சய தாம்பூலத்தில் இருந்து அன்னை இல்லம் வரை சிறிய மாற்றங்களுடன் பாத்திரத்திரத்திற்கேற்றவாறு பேசியிருப்பார்.

அடுத்து கர்ணன்..
உடல் வாகில் முந்தைய படங்களில் இருந்து வித்தியாசம் இல்லையெனினும் குரலில் தான் இடி இடித்தது போல் இருந்தது.இதற்கு முரணாக அடுத்ததான
பச்சை விளக்கில் குரல் சாந்தமாய் காட்டியது.
ஆண்டவன் கட்டளையிலும் இரு வித குரல்களில் பேசியிருப்பார்.முற்பகுதியில் ஒன்றுமாய் பிற்பகுதியில் வேறுமாயும் இருக்கும்.
வீரபாண்டிய கட்டபொம்மனில் இருந்தே குரலில் மிகுந்த கர்ஜனை சேர்ந்து கொண்டாலும் இடைப்பட்ட படங்களில் எல்லாம் அது தெரியாமல் பாத்திரங்களின் தன்மைக் கேற்றவாறு தன் குரலை மாற்றி மாற்றி பேசி குரலிலும் தனித்த நடிப்பை
காட்டியவர்.
புதிய பறவை..
அந்த சிம்மக்குரலில் இருந்தா இப்படியொரு வெளிப்பாடு என்னும் ஆச்சர்யம் இதில்.மென்மையான காதல் சொல்லும்படம் என்பதால் அதற்கேற்ற குரலில் வித்தியாசமாய் பேசியிருப்பார்.சில காட்சிகள் தவிர்த்து சிம்மக்குரல் சிறு பூவாக மாறிய படம்.
நவராத்திரி ..
ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால் ஒருவரின் ஒன்பது குரல் .
பின் தனித்துவமானதாய் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த திருவிளையாடல்.இதில் சிவனாக பிரமிக்க வைத்தாலும், விறகு வெட்டியின்
பொருத்தமான பேச்சை தமிழறிந்தோர் வியக்காதோர் இருக்க முடியுமா ?
இவைகளிலிருந்து விலகி மோட்டார் சுந்தரம் பிள்ளையின் சிறப்பான மாடுலேசனை மறக்க முடியுமா?
சரஸ்வதி சபதத்தில் நாரதருக்கும், கவிஞருக்கும் இரு வேறு குரல்கள்.பின் வீரபாகுவின் கர்ஜனனையான குரலில் கந்தன் கருணையும். பின் நான்கு படங்களில் பொதுவான பாணியில்.நெஞ்சிருக்கும்வரை பேசும்தெய்வம் தங்கை பாலாடை .
திருவருட் செல்வரில் அப்பரின் குரலோசை
எதிலும் காட்டாதது.
சிறிது தள்ளி தில்லானா மோகனாம்பாளில் வித்வானின் மோகனக்குரலில் பரவசப் படுத்தியிருப்பார்.எல்லாப் படங்களையும் எடுத்துச் சொல்ல இடம் போதாது என்பதினால் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.
எங்க ஊர் ரராஜாவில் ஆண்மைகுரல்,
உயர்ந்த மனிதனில் மிடுக்கான குரல்,
தெய்வமனில் மூவர்ண குரல்,
சிவந்தமண்ணில் வீரக்குரல்,
விளையாட்டுப் பிள்ளையின் வசீகர குரல்,
வியட்நாம் வீட்டில் பிராமணர் பாஷையில்,
சவாலே சமாளியில் முழக்க குரல்,
அந்தோனியின் அட்டகாச குரல்,
மூக்கையாத் தேவரின் பாரம்பர்ய மொழிக்குரல்,
வசந்த மாளிகையில் காதல்மொழிக் குரல்,
ராஜராஜ சோழனின் சரித்திரக் குரல்,
ராஜபார்ட்டின் நவரசக் குரல்,
சௌத்ரீயின் கடமைக் குரல்
என்று ஒவ்வொரு குரலிலும் ஒரு ரசம்.
ரசங்கள் ஒன்பது என்றாலும் இவர் குரல்களை எத்தனை ரசமாகக் கொள்வது?
வரிசை கட்டி வந்த பட வரிசையில்,
அந்தமான் காதலியில் இருந்து சிறிது மாற்றம் ஏற்பட்டது எனலாம்.அந்தக் குரலில்
ஆண்மை முதிர்வும், கம்பீரம் இன்னும் சற்று கூடியும், அனுபவ அறிவுகள் கூடியும்
இருந்தன..
பின் வந்த சில படங்களில்,
இளமைத் தோற்ற வேடங்களுக்கு
அதை பின்பற்றாமல் இளமை துடிப்புடன் பேசி ஆச்சர்யப்படுத்தாமல் இல்லை.
அண்ணண் ஒரு கோவில்,
என்னைப் போல் ஒருவன்,
தியாகம் படங்களை சொல்லலாம்.
பராசக்தி ஓர் ஆச்சர்யம்.ஏனெனில் அதற்கு பின் வந்த சில படங்களில் ஒரு நளினமும்,
வீரியமும் கலந்த குரல்களில் அவர் படங்கள் இருக்கும்.நாடகங்களில் ஸ்த்ரீபார்ட் உட்பட பல வேடங்களில் நடித்ததால் உண்டான மாற்றம் என்று சொல்லப்படுவதுண்டு.
படங்களில் நடிக்கத் தொடங்கிய பின், நாடகங்களில் பெண் வேடங்களை அதிகம் செய்யாமலும் அவர் நடித்து வந்த நிலையில், காலங்கள் ஆக ஆக குரலில் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேதானிருந்தன.இந்தக் குரல் மாற்றங்கள் பேராண்மையாய் சிம்மக் குரலாக மெருகேறிக் கொண்டே இருந்தது.
வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிகர்திலகத்தால் இப்போது பேச முடியுமா என்று சிலர் கேட்டதுண்டு.ஆனால் பின்னாட்களில் அவர் வாய் திறந்தாலே அது பெரும் கர்ஜனையாய் தானிருக்கும்.
அதில் அனுபவங்களும் சேர்ந்தே இருக்கிறது.அவர் குரல் ஒவ்வொரு படத்திற்கும் கம்பீரத்தை சேர்த்துக் கொண்டே தான் இருந்தது.
50 வருடங்களை கடந்த நிலையில் அவரின் திரிசூலம் மெகா ஜாலம்.
ஒரு பாத்திரத்தின் தன்மையில் இருந்து ஒரு வார்த்தை கூட வேறு பாத்திரத்திற்கு பேசப்படாத வித்தியாசம் அது.
வரிசைபட்டியலில் சிறிது கடந்தால் ,
பின்,
கல்தூணில் கவுண்டர் பாஷையிலும்,
ஹிட்லர் உமாநாத்தில் வேறு விதமாகவும் பேசிய குரல்கள்.நடிகர்திலகம் இந்த வயதுகளில் செய்த வித்தியாசமான தொடர் அணுகுமுறையை செய்தவர்களும் இல்லை. செய்வதற்கும் யாருமில்லை.இருந்தாலும் செய்வார்கள் என்பதற்குமில்லை.நாமும் அவரோடு எவரையும் இணைத்து பேச வேண்டிய அவசியமும் இல்லை.
நிறைய வித்தியாசமாயும், ஆச்சர்யப்படுத்தும் படி அவர் செய்த ரோல் என்பதை விட இப்படத்தின் குரலைச் சொல்லலாம்.
அது,
"முத்துக்கிருஷ்ணா "
கருடா சௌக்கியமா?
பின் வரிசை படங்களில் ,
தீர்ப்பில் தோரணைக்குரல்,
துணையில் நையாண்டி குரல்,
பரீட்சைக்கு நேரமாச்சுவில் நைச்சிய குரல்,
வெள்ளை ரோஜாவில் பாதிரியின் பாசக்குரல்,
வாழ்க்கையில் சாதித்த குரல்,
சிம்ம சொப்பனத்தில் சிம்மக்குரல்,
படிக்காத பண்ணையாரின் அன்புக்குரல்,
முதல் மரியாதையில் கிராமத்து குரல்,
என்று நடிகர்திலகத்தின் குரல்
காந்தமாய் நம் மனதை இழுக்கவே செய்தன.
இக் காலகட்டத்தில் ஏற்பபட்ட உடல் நலக் குறைவு அவர் உடலை சற்று தெம்பிழுக்கச் செய்ததே ஒழிய குரலை சோர்வடைய வைக்கவில்லை.
இறுதியாக ஒன்று ..
"ஆனா விதை போட்டது நாந்தேன்
இதெல்லாம் என்ன பெருமையா "
சாதாரண வசனம்தான்.
எந்தக் குரல் பேசியது என்பதில் அதன் புகழ்.
மீண்டும் இறுதியாக ,
என் ஆச ராசாவேவில் தெருக்கூத்து கலைஞர்களின் பெருமையை பேசும் குரலிலும் கம்பீரம் அமைதியாக வீற்றிருக்கும்.

 

நன்றி
செந்தில்வேல் சிவராஜ்..
 

Leave a Reply