• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நெருக்கடியான காலத்திலும் ஜனாதிபதி, அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கினார்

இலங்கை

”பொருளாதார நெருக்கடியான காலத்திலும் கூட ஜனாதிபதி அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாவை வழங்கியதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப் பட்டது.

அரச ஊழியர்களின் சம்பளம் நிர்ணயிக்கப் பட்டிருப்பதால், அதனை அறவே குறைக்கக் கூடாது என்று தெரிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதனை நிராகரித்தார்.

எதிர்க்கட்சிகள் எவ்வகையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் பொருளாதார நெருக்கடியான காலத்திலும் கூட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாவை வழங்கியிருந்தார்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட 2022 ஆம் ஆண்டளவில், 13 இலட்சத்து எண்பதாயிரம் அரச ஊழியர்கள் இருந்தனர். அவர்களுக்கான சம்பளம், 95 பில்லியன் ரூபாவாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராக பதவியேற்கும் போது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை காணப்பட்டது.

அதன்படி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
அதில் ஒன்று அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்பது. ஆனால் ஜனாதிபதி அதனை கடுமையாக நிராகரித்தார்.

கடந்த காலத்தில் சம்பளமே வழங்கமுடியாத நிலை காணப்பட்டிருந்ததை இன்று சிலர் மறந்து விட்டார்கள். அரச ஊழியர்களின் சம்பளத்தை கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே பத்தாயிரம் ரூபாவால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகரித்தார்.

இதனால், திறைசேரியின் மாதாந்தச் செலவு 12 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமானது.
ஆனால் சம்பள அதிகரிப்பு போதாது என்பதே ஜனாதிபதியின் கருத்தாகும்” இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Leave a Reply