• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரகு தாத்தா ன்னு ஒரு படம் வந்திருக்கிறது. இந்த பெயரை உருவாக்கியது பாக்யராஜ் தான். ரகு...ரகு...ரஹ...ரஹ....காமெடி நமக்குத்தெரியும்.

சினிமா

சிலர் புதிய நடிகர், புதிய நடிகை இப்படி கொண்டு வந்து பெரிதாக அவர்களை உருவாக்கி விடுவாங்க. பாலச்சந்தர், பாரதிராஜா கூட இப்படித்தான். ஆனா பாக்யராஜ் தான் வந்து வெற்றி பெற முடியாமல் சினிமாவை விட்டு போகவும் முடியாமல் தவிக்கிறவங்க வாழ்க்கையை அப்படியே அசால்ட்டா திருப்பி போட்டவர்.

அவருக்கு அப்படி ஒரு சக்தி இயற்கையாகவே அமைந்தது. தன்னோட முதல் படத்திலேயே குழந்தை நட்சத்திரம் சுமதியை நாயகியாக கொண்டு வந்தவர். நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த சங்கிலி முருகனை இதில் தான் அறிமுகப்படுத்துகிறார். 'ஒரு கை ஓசை' படத்தில் சினிமாக்களில் நடனமாடிக்கொண்டிருந்த பொன்னி என்கிற பெண்ணை நல்ல முறைப்பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்.

'இன்று போய் நாளை வா' படத்தில் தன் பால்ய சிநேகிதர்களை நடிக்க வைத்திருப்பார். 'தூறல் நின்னு போச்சு' படத்தில் செந்தாமரை என்கிற நடிகரை, ,பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தும் முன்னுக்கு வரமுடியாமல் தவித்த செந்தாமரையை, பிஸி நடிகராக மாற்ற நடிக்க வைத்தார் பாக்யராஜ். செந்தாமரை அதற்கு பிறகு கால்ஷீட் கொடுக்க முடியாமல் திணறினார் என்பது வரலாறு. நம்பியார் என்கிற கொடூர வில்லனை சென்ட்டிமெண்ட்டில் கலக்க வைத்திருப்பார் பாக்யராஜ். நம்பியாரும் சாகும் வரை நடித்தார். 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தில் நாயகியாக வந்து வாய்ப்பில்லாத அருணாவை பூர்ணிமாவின் தோழியாக நடிக்க வைத்தார் பாக்யராஜ். அருணாவை அதனால் பல படங்களுக்கு அழைத்தனர். 'முதல் மரியாதை' உட்பட.

முந்தானை முடிச்சு படத்தில் கே.கே.சௌந்தர் என்கிற நாடக நடிகரை நடிக்க வைத்து 'எஸ்.வி.சுப்பையா' ரேஞ்சுக்கு உயர்த்தி விட்டதும் பாக்யராஜ் தான். அதே படத்தில் தீபாவை திரும்பக்கொண்டு வந்ததும் அவரே. தாவணிக்கனவுகள் படத்தில் அவருக்கு தங்கைகளாக நடித்த உமா, நித்யா, கோகிலா, ப்ரியதர்ஷிணி போன்றோர் தான் பின்னாளில் சாட்டிலைட் சேனல் சீரியல்களில் முன்னணி நடிகைகளாக நடித்தனர். தன் எல்லா அசிஸ்டண்ட்டுகளுக்கும் ரோல் தந்து அவர்களை கேமிராவுக்கு முன்னாலும் பணியாற்ற வைத்தார் பாக்யராஜ். அப்படி பார்த்திபனும் சிவாஜியோடு நடிக்க முடிந்தது. யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு?..

'சின்ன வீடு' படம் மூலம் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஜெய்கணேஷ் என்கிற நாயக நடிகரை தந்தையாக்கி பிஸி நடிகராக்கினார். குலதெய்வாம் ராஜகோபால் என்கிற 50 காலத்து நடிகருக்கு மறுவாழ்வாக அமைந்தது 'எங்க சின்ன ராசா'. இதே படத்தில் நாயகிக்கனவோடு வந்து தோல்வியடைந்த சி.ஆர். சரஸ்வதிக்கு அம்மா நடிகை என்கிற ஏணியமைத்து ஏற்றி விட்டதும் பாக்யராஜ் தான். அவரும் 'அம்மா இட்லி சாப்பிட்டார்' என்றபோது தமிழகமே நம்பியதும் நடந்தது.

தமிழில் நாயகியாக அறிமுகமாகி தமிழ் வாய்ப்பில்லாமலிருந்த ஷோபனாவை 'இது நம்ம ஆளு' படம் மூலமும், பானுப்ரியாவை 'ஆராரோ ஆரிரரோ' படம் மூலமும், ரோகிணியை 'பவுனு பவுனு தான்' படம் மூலமும், ஐஸ்வர்யாவை 'ராசுக்குட்டி' படம் மூலமும் இரண்டாம் வரவு வரவைத்தவரும் கே.பாக்யராஜ் தான்.

'முந்தானை முடிச்சு மூலம் நளினிகாந்த்தும், 'ராசுக்குட்டி' மூலம் கல்யாண்குமாரும் திரும்ப திரைக்குள் நுழைந்ததும் நடந்தது. பாலையாவின் மகன் ரகு நாயகனாகி வாய்ப்பில்லாமல் ஜூனியர் பாலையாவாக காமெடிக்கு கொண்டு வந்ததும் கே.பா தான்.

'சின்ன வீடு' படத்தில் நடித்த அனுபமா என்கிற அனு சின்னவீடாக நடித்திருப்பார். சுவாரசியமான ஒரு கதை. என்னவென்றால் அனு டி.ராஜேந்தரின் 'ராகம் தாளம் பல்லவி' மூலம் திரைக்கு வந்தவர். 16 வயதினிலே படத்தின் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு 'சின்ன சின்ன வீடு கட்டி' என்கிற படத்தை எடுத்த போது அனுவுக்கும், அவருக்கும் பழக்கமானது. ராஜ்கண்ணுவோடு வாழத்தொடங்கினார் அனு. 'கன்னிப்பருவத்திலே' படத்தை ராஜ்கண்ணு பாரதிராஜாவின் உதவியாளரை வைத்து தொடங்கிய போது பாக்யராஜ் தான் கூடவே இருந்து படம் முடிக்க எல்லா உதவிகளையும் செய்தார். நடிகர் தேர்வு கூட பாக்யராஜ் தான். அப்படித்தான் விஜயராஜ் என்கிற விஜய்காந்த்தை இரண்டாம் வரவுக்காக தேர்ந்தெடுத்திருந்தார் பாக்யராஜ். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் ராஜேஷ் அறிமுகமானார். நாயகி வடிவுக்கரசி.

இந்தப்படத்தின் ஷுட்டிங் போது தயாரிப்பாளர் என்கிற முறையில் ராஜ்கண்ணு சார்பாக அனு தான் மேற்பார்வைக்கு வருவாராம். நாற்காலி போட்டு முதலாளியம்மாவாக உட்கார்ந்திருந்த அனுவுக்கும், நாயகி வடிவுக்கரசிக்கும் முட்டிக்கொள்ள வடிவை வைத்தேனா பார் என்றிருக்கிறார் அனு. பாக்யராஜ் முழு ஷுட்டிலும் பணி செய்ததாலும், அவரே வில்லனாக நடித்ததாலும் வடிவோடு நெருங்கிப்பழகுவதாக அனு போய் ராஜ்கண்ணுவிடம் கோள் மூட்டி விடுகிறார். அடுத்த நாள் ராஜ்கண்ணு ஸ்பாட்டில் வந்து கத்த வடிவுக்கும் கோபம் வர பெரும் களேபரமாகி கசப்புகளோடு ஒரு வழியாக படம் முடிந்தது. படம் வெற்றி.

அதே அனுவை பாக்யராஜ் பின்னாளில் ஒரு ரோல் கொடுத்து தூக்கி விட நினைத்தது ஒரு படத்தில். அது தான் 'சின்னவீடு'. பாத்திரமும், படமும் அதுவே.

தன் கசப்பனுபவங்களைக்கூட மனதில் வைக்காது அனுவுக்கு வாழ்க்கை கொடுத்தது அந்தப்படம் என்றால் காரணமான பாக்யராஜ் எப்படிப்பட்ட மனிதர்!....

சிலரால் தான் சிலதை உருவாக்க முடிகிறது...இந்த 'ரகு தாத்தா' டைட்டில் மாதிரி....

Selvan Anbu
 

Leave a Reply