TamilsGuide

இந்தியா இதை மட்டும் செய்தால் போரை நிறுத்திவிடலாம்.. ஜெலன்ஸ்கி சொன்ன ஐடியா 

பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக போலாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். போலந்தில் இருந்து 7 மணி நேர ரெயில் பயணத்திற்கு பிறகு நேற்று [ஆகஸ்ட் 23] உக்ரைன் சென்றடைந்தார் மோடி . உக்ரைனில், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை தலைநகர் கீவ் -இல் சந்தித்து பேசினார். ரஷியா உக்ரைன் போருக்கு இடையில் பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. போர் நிறுத்தம், இருநாட்டு உறவுகள் குறித்து மோடியும் ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஜெலன்ஸ்கியின் வேண்டுகோள்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, புதின் நாட்டின் [ரஷியா] பொருளாதாரத்தை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருக்கிறார். ரஷியா பிரதானமாக எண்ணெய் வளத்தில் இருந்துதான் பணம் பார்க்கிறது. அதைத்தவிர அவர்கள் நம்பிக்கை வைக்கும்படி வேறு எதுவும் இல்லை. இந்த எரிசக்தி ஆற்றல் ஏற்றுமதியில்தான் பிரதானமாக ரஷியா ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும் போருக்குப் பிறகு ரஷியா மீது மேற்குலகம் பொருளாதாரத் தடைகள் விதித்திருந்தாலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இன்னும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் எரிசக்தியை ஏற்றுமதி செய்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய ஜெலன்ஸ்கி, ரஷியாவுடனான இந்த வர்த்தகத்தை இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிறுத்திக்கொண்டால் அது ரஷியாவுக்கு மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். இதன்மூலம் போர் நிறுத்தத்துக்கு ரஷியாவை சம்மதிக்க வைக்க முடியும் என்பதே ஜெலன்ஸ்கி வலியுறுத்தும் கூற்றாகும்.

இந்தியா அரசின் முரண்

2022 ஆம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கியதற்குப் பின் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு மேற்கு நாடுகள் தடை விதித்திருந்தன. இதனால் ஆசிய நாடுகளைக் கவர ரஷியா தங்களின் எண்ணெய் விலையை வெகுவாகக் குறைந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவில் இருந்து அதிக எண்ணெய்யை ஏற்றுமதி செய்யத் தொடங்கின. இந்தியா தொடர்ந்து இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது குறித்து மேற்கு நாடுகளும் இந்தியாவை விமர்சித்திருந்தன.

போர் தொடங்கிய பின்னர் இந்தியாவின் ரஷிய எண்ணெய் இறக்குமதி 41 சதவீதமாக உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் சீனாவை பின்னுக்குத் தள்ளி ரஷிய எண்ணெய்யை வாங்குவதில் இந்தியா முன்னுக்கு வந்தது. இந்த நிலையில்தான் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ரஷிய எண்ணெய்யை புறக்கணிக்க இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் மோடி உக்ரைனின் அமைதியைக் கருத்தில் கொண்டு ஜெலன்ஸ்கியின் வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பரா? என்ற கேள்வி உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.
 

Leave a comment

Comment