• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பண்டிதப் பாரம்பரியம் என்பது கல்வி-ஞானம்- அறிவு ஆகியவை சம்பந்தப்பட்ட ஒரு வரலாறு என்பதே மிகப்பொருத்தமானது

"பண்டிதப் பாரம்பரியம் என்பது கல்வி-ஞானம்- அறிவு ஆகியவை சம்பந்தப்பட்ட ஒரு வரலாறு என்பதே" மிகப்பொருத்தமானது"
“ஈழத்துப் பண்டிதப் பாரம்பரியம்” என்னும் தலைப்பில் கனடாவில் உரையாற்றிய  பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தெரிவிப்பு

யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்த தமிழ்ப் பண்டிதர்கள் மற்றும் வித்துவான்கள் ஆகியோரால் கட்டிக் காப்பாற்றப்பெற்ற  "பண்டிதப் பாரம்பரியம் என்பது கல்வி-ஞானம்- அறிவு ஆகியவை சம்பந்தப்பட்ட ஒரு வரலாறு என்பதே" மிகப்பொருத்தமானது. அதன் வரலாற்றையும் எம் மத்தியில் வாழ்ந்த மேற்குறிப்பிட்ட தமிழ் மொழி மீதான ஆர்வம் கொண்ட கல்விமான்கள் ஆகியோர் பற்றி கனடாவில் நாம் இன்று கலந்துரையாடுவது பெருமைக்குரிய விடயமாகும். இவ்வாறான சந்தர்ப்பத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்த "ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்திற்கும் அதன் முக்கிய உறுப்பினர்களான எழுத்தாளர் அகில் சாம்பசிவம் மற்றும் சுப்பிரமணியன் ஐயா அவர்கட்கும் எனது நன்றி," 
இவ்வாறு  கடந்த 17-08-2024     சனிக்கிழமை“ஈழத்துப் பண்டிதப் பாரம்பரியம்” என்னும் தலைப்பில் கனடாவில் 5633, Finch avenue East, Unit7  என்னும் விலாசத்தில் அமைந்துள்ள ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபத்தில் உரையாற்றிய,   பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தெரிவித்தார்.
பேராசிரியர் நாகராசா சுப்பிரமணியன் ஐயர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேற்படி உரையரங்கில் பல இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் கனடாவில் வாழும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலில் தலைமையுரையாற்றிய பேராசிரியர் நாகராசா சுப்பிரமணியன் ஐயா அவர்கள் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் தனது மாணவன் என்றும்  பின்னாளில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியபோது அவரது தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கல்வி தொடர்பான ஆர்வமும் ஆற்றலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களுக்கு நன்கு புலப்பட்டது என்றும் தெரிவித்து 'யாழ்ப்பாணத்து பண்டிதப் பாரம்பரியம்' என்பதை நன்கு உணர்ந்தும் தெரிந்தும் தேடியும் அரிய தகவல்களை எமக்குத் தரவல்லவர் அவரே என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய  பேராசிரியர் எஸ் சிவலிங்கராஜா அவர்கள் தான் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 1981ம் ஆண்டு நிரந்தர தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பதவியேற்று சில மாதங்களில் பேராசிரியர் இந்திரபாலா போர்த்துக்கல் நாட்டுக்கு ஒரு புலமைப் பரிசில் திட்டத்தின் மூலம் சென்று கற்றுவரும்படி தன்னைக் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் தன்னிடம் பேசும் போது யாழ்ப்பாணத்து கல்விப் பாராம்பரியம் தொடர்பான சரியான தகவல்கள் இல்லாது இருக்கும் போது அந்த குறையை நிவர்த்தி  செய்யவல்லவர் நீ தான் என்று தன்னிடம் கூறினார் என்றும் தொடர்ந்து, சரியான ஆய்வுகள் செய்து யாழ்ப்பாணத்தின் தமிழ்க் கல்வி மற்றும் பொதுக் கல்வி தொடர்பான பாரம்பரியத்தைப் பற்றி ஆய்வுகளும் அதன் வெளிப்பாடாக நூல்களும் வெளிவருவது என்பது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்து போர்த்துக்கல் நாட்டுக்கு புலமைப் பரிசில் பெற்று செல்வதிலும் பார்க்க, எமது மண்ணிலேயே தங்கியிருந்து எமது பிரதேசத்தின் கல்விப் பாராம்பரியம் பற்றி ஆராய்ந்து எழுதும் படியும் அவ்வாறு எமது யாழ்ப்பாண கல்விப் பாராம்பரியம் பற்றி கற்றும் எழுதியும் பதிவுகளை மேற்கொண்டால் அதன்  தொடர்ச்சி உங்களை இலங்கையின் கல்விப் பாரம்பரியம் என்ற அடுத்த கட்டத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் என்று தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக நான் யாழ்ப்பாணத்தில் பண்டிதப் பாராம்பரியம் பற்றியும் ஆராய்ச்சி செய்து கொள்ள வேண்டி ஏற்பட்டது. ஏனென்றால் யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி கற்றல் அல்லது கற்பித்தல் ஆகியவை தொடர்பாக நாம் பல அத்தியாயங்களை எழுதத் தொடங்குகையில் எமது பகுதிகளில், தமிழ் மொழி தொடர்பான அரிய பணிகளை ஆற்றியவர்கள் பண்டிதர் என்பது அப்போது எனக்கு புலப்பட்டது.
அவர்களைப் பற்றி நான் நிறையவே கற்றுக் கொண்டேன். அவர்களில் பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை- வித்துவான் சொக்கன்- பண்டிதர் குலசிங்கம் உட்பட பலர் தொடர்பாக நான் ஆச்சரியம் தரும் தகவல்களைப் பெற்றுக் கொண்டேன்" என்றார்
இறுதியில் அங்கு உரையரங்கை செவிமடுக்க வந்தவர்கள் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு பல அரிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

-- ஆர். என். லோகேந்திரலிங்கம்
 

Leave a Reply