• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆருக்கு தியேட்டரில் கிடைத்த தெளிவு

சினிமா

நாடக உலகில் மேடைப் புலி என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட கே.பி கேசவன். அவரது நாடகத்திற்கு நிச்சயமான வசூல் என்பது அந்நாளில் உறுதி. பாய்ஸ் கம்பெனியில் இருந்தபோது சகோதரர்களுடன் நெருங்கிப்பழகியவர். அழகும், கணீர்க்குரலில் அவர் பேசும் வசனமும் அப்போது நாடகமேடையில் அவரை பிரபலப்படுத்தியிருந்தது.  நாடகத்துறையில் இருந்து விலகி சினிமாப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர், ராஜ்மோகன் என்ற படத்தில் கதாநாயகனாக அப்போது நடித்துக்கொண்டிருந்தார். கம்பெனியில் இருக்கும்போது அத்தனை பேரும் புகழும் பெற்றிருந்த அவர், “ராம்சந்தரா உன் அழகுக்கும் கலருக்கும் நீ ஒருநாள் இந்த சினிமாவை ஆளப்போறேடா”- என எம்.ஜி.ஆரை பார்க்கும்போதெல்லாம் சொல்வார். அப்போதெல்லாம் வெட்கப்பட்டு சிரிப்பார் எம்.ஜி.ஆர். காரணம் சினிமாவில் நடிப்பது குதிரைக்கொம்பான காலம் அல்லவா.

ஆனால் பின்னாளில் அதுதானே நடந்தது. பின்னாளில் பெரும் போராட்டங்களுக்கிடையில் சினிமா உலகில் தனக்காக ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்ட எம்.ஜி.ஆர், அங்கு தொடர்ந்து நிலைத்து நிற்கவும் கே.பி கேசவனே காரணமானார். 

சினிமா உலகில் புகழின் உச்சியை தொட்டபோதும், தன்னைச்சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக எம்.ஜி.ஆர்  கற்பனை செய்துகொள்ளவில்லை. வெற்றிகளின்போது வெறி கொண்டு ஆடாமலும், தோல்விகளின்போது துவண்டுவிடாமல் போராடவும் இருக்க அவருக்கு பாடமாக இருந்தவர் கே.பி கேசவன்தான். 

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் நடந்தது. சென்னை 'நியூ எல்பின்ஸ்டன்' தியேட்டரில் அப்போது 'இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டிருந்தது. அதில் கதாநாயகனாக நடித்தவர் அன்றைய பிரபல நடிகர். நாடக மேடையிலும் சினிமாவிலும் நடித்து பெரும் புகழ்ப் பெற்றிருந்த அவருடன் எம்.ஜி.ஆரும் வேறு சிலரும் படத்தைப் பார்க்க சென்றிருந்தனர். 

இடைவேளையின்போது, படத்தின் கதாநாயகனே படம் பார்க்க வந்த தகவல் ரசிகர்களுக்கு எட்டியது. ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக எழுந்து நின்று அவர் பெயரைக் கூறி வாழ்த்துக் கோஷமிட ஆரம்பித்தார்கள். அந்தப் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த எம்.ஜி.ஆர், இதைத் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தார். கதாநாயகனை தங்கள் அன்பில் திளைக்கவைத்தனர் ரசிகர்கள். இத்தனை ஆதரவும், செல்வாக்கும் பெற்ற ஒரு நடிகனின் அருகில் தான் அமர்ந்திருந்தது பெருமையாக இருந்தது எம்.ஜி.ஆருக்கு.

படம் முடிந்த பின் புறப்பட்டால் ரசிகர்கள் அன்பிலிருந்து விடுபடமுடியாது என்பதால் கதாநாயக நடிகர் அதற்கு முன்பே புறப்பட்டார். ஆனால் அதற்குள் மக்களும் வெளியே வந்துவிட்டனர். கதாநாயக நடிகர் மேலே இருந்து படி இறங்கி கீழே வருவதற்க்குள்  ரசிகர்கள் அவரை சூழந்துக் கொண்டு ஆட்டோகிராப் கேட்டு அன்புத்தொல்லை கொடுத்தனர். அவர்களிடம் இருந்து அவரை பெரும் சிரமத்துடன் காப்பாற்றி அன்று பாதுகாப்பாக காருக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தது எம்.ஜி.ஆர்தான்.  

அன்று மக்களுக்கு எம். ஜி.ஆர் என்ற துணைநடிகரைத் தெரியாது. ரசிகர்களிடம் அவர் சண்டையிட்டு கதாநாயக நடிகரை மீட்டபோது கூட அவரும் அந்த படத்தில் நடித்திருப்பவர்களில் ஒருவர் என்பதை அவர்கள் அறியவில்லை. அன்றைக்கு எம்.ஜி.ஆரின் பிரபல்யம் அவ்வளவுதான். 

காலச் சக்கரம் சுழன்றது. அதற்குப் பல ஆண்டுகளுக்கு பின், எம்.ஜி.ஆர் நடித்த 'மர்மயோகி' திரைப்படம் வெளியானது. படத்தின் வெற்றியால் மூலைமுடுக்கெல்லாம் எம்.ஜி.ஆரின் வாள்வீச்சும், அநாயாசமான நடிப்பும், இளமையும், அழகும் மக்களால் சிலாகிக்கப்பட்டது. அப்போது சென்னை 'நியூ குளோப்' தியேட்டரில் அதே கதாநாயக நடிகருடன் ஓர் ஆங்கிலப் படம் பார்க்கச் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர். 

இடைவேளையின்போது 'மர்மயோகி' எம்.ஜி.ஆர் படத்திற்கு வந்திருந்த தகவல் அறிந்து ரசிகர்கள் எழுந்து கூச்சல் போட்டார்கள். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அந்த முன்னாள் கதாநாயக நடிகரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அவரைத் தள்ளிக்கொண்டுச் சென்று எம்.ஜி.ஆரிடம் ஆட்டோகிராப் வாங்கினர் ரசிகர்கள். பலர் அந்த முன்னாள் கதாநாயக நடிகரிடமே தங்கள் நோட்டுப்புத்தகங்களை தந்து எம்.ஜி.ஆரிடம் ஆட்டோகிராப் வாங்கித்தரக்கோரினர். பொறுமையுடன் அதை செய்தார் அவர். அந்த அளவிற்கு அந்த முன்னாள் கதாநாயகன் மக்களின் மனங்களில் இருந்த மறக்கப்பட்டிருந்தார். 

படம் முடிந்து வெளியே வந்தபோது மக்கள் கூட்டம் எம்.ஜி.ஆரை சூழ்ந்தது. அந்த ரசிகர் கூட்டத்திடமிருந்து எம்.ஜி.ஆரைக் காப்பாற்றி ஒரு டாக்ஸியில் ஏற்றி அனுப்பினார் அந்த 'முன்னாள்'. எம்.ஜி.ஆர் ஏறி அமர்ந்த டாக்ஸி அங்கிருந்து சீறிக்கிளம்பியது. வண்டியின் பின் கண்ணாடி வழியாக எம்.ஜி.ஆர் திரும்பிப்பார்த்தார். திரண்டு நின்ற மக்கள் கூட்டத்தில் மக்களோடு மக்களாக அந்த முன்னாள் கதாநாயகனும் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார். இத்தனைக்கும் அந்த நடிகருக்கு வயதாகிவிடவுமில்லை; நடிப்பு வன்மையும் குறைந்துவிடவில்லை. 

எம்.ஜி.ஆர் மனதில் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அன்றுதான், எவ்வளவுதான் புகழ் கிடைத்தாலும் அதன் போதைக்கு அடிமையாகிவிடக்கூடாது என தீர்க்கமான முடிவுக்கு வந்தார். 

“எந்த மனிதனும் அவனுடைய வாழ்க்கையில் உச்ச நிலைக்குப் போய்விட்டதாக நினைப்பது, தோல்வியான ஒரு சூழ்நிலையில் தோன்றும் திகைப்பேயாகும். கலைஞர்களுக்கு உச்சநிலை, தாழ்ந்தநிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. அவ்வளவுதான். கலைஞனைப் பொறுத்தவரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும்; தாழ்த்தும். அது மக்களின் மனதில் தோன்றும் முடிவு! - என 1968 ம்ஆண்டு ஏப்ரலில்  சினிமா இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்  மேற்சொன்ன சம்பவங்களைக் கூறி பேட்டியளித்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு படிப்பினையை ஏற்படுத்திய அந்த கதாநாயக நடிகர் வேறு யாருமல்ல; சினிமா வாய்ப்புக்காக முதன்முதலாக எம்.ஜி.ஆர் நாடிச் சென்ற அதே கே.பி.கேசவன்தான்!

எஸ்.கிருபாகரன்

Leave a Reply