• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திமிர் பிடித்தவள் அல்ல...அந்தத்திமிருக்கே பிடித்தவள்...

சினிமா

கோபக்கார மாடர்ன் பொண்ணுன்னா அது மாதவி தான்.
மாதவி மரோசரித்ரால வந்ததுமே தொடர்ந்து படவாய்ப்புகளை வச்சி நீட்டியது கமல் தான். ராஜபார்வை, டிக்டிக்டிக், எல்லாம் இன்பமயம், நீதிதேவன் மயக்கம், சட்டம்....தொடர்ந்து..
அதுக்கப்புறம் மங்கம்மா சபதம், காக்கி சட்டை....
ரஜினி தில்லுமுல்லு, கர்ஜனை, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வழிந்தால், விடுதலை, அதிசயப்பிறவி....
இந்த எல்லா படங்களையும் எடுத்துக்கிட்டா மாதவியின் ரோல்களில் பெரிய வித்தியாசமே இருக்காது. பணக்காரவீட்டு படிச்ச பொண்ணு. அம்பிகா, ராதாவுக்கு கொடுத்த வெரைட்டில கொஞ்சமாச்சும் மாதவிக்கு கொடுத்திருந்தா காணாமல் போயிருக்க மாட்டாங்க. 
கே.பாலாஜி 'நிரபராதி'படத்தை மாதவியை மட்டுமே நம்பி எடுத்தார். மாதவி இயக்குனர் கம் ஒளிப்பதிவாளர் எம்.கர்ணனை வாழவைத்தார்னு சொல்லலாம். சட்டத்துக்கு ஒரு சவால், ஜான்சி ராணி, ஆண்டவன் சொத்து, வேட்டைப்புலி என அவர் எடுத்த கௌபாய் படங்களில் மாதவி தான் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே. இடையில் கர்ணன் சேர்த்த பிட்களால் அந்தப்படங்கள் வசூலை வாரிக்குவித்தன. ஆனால் மாதவியை யாருமே அழைக்கவில்லை. 'உன் கண்ணில் நீர் வழிந்தால்', 'மங்கம்மா சபதம்' தோல்வியால் ரஜினி-கமல் 'கல்லர சகோதரி'களிடம் சென்று விட்டனர். 
ஆனால் மலையாளத்தில் மம்முட்டியோடு அவர் நடித்த ஒரு வடக்கன் வீரகதாவில் மாதவிக்கு மம்முட்டிக்கு இணையான ரோல். அசத்தி இருப்பார். மாதவியின் 'ஆகாசதூது' படத்தை பார்த்து விட்டு கேரளம் குடும்பம் குடும்பபமாக கண்ணீர் விட்டு அழுதது. 
தெலுங்கு 'கைதி'யில் மாதவியின் அந்த பாம்பு நடனம் அவ்வளவு அசத்தலாக இருந்தது அப்போது. கைதி என்கிற மெகா ஹிட் மூலம் தெலுங்கில் வெற்றி நடிகையானார். 
ராஜபார்வை படத்தில் சுவரில் மாதவியின் கண்கள் மட்டும் சித்திரமாக இருக்கும். அதை பார்க்கும் போது அவ்வளவு அழகு. கமலுக்கு பார்வை இல்லாததால் மாதவியின் கண்களை க்ளோரிஃபை செய்து படத்தில் வைத்தார்களா..தெரியாது..
தில்லுமுல்லு படத்தில் ரஜினியை குழப்பத்தோடே காதலிக்கும் மாதவி அழகு. "அப்போ மீசை இருந்தது" என சொல்லும் மாதவியின் முன் ரஜினி....அதுவும் மீசை அற்ற ரஜினி....ஒரு கட்டிளங்காளை போல் சரி ஜோடியாக இருப்பார்.
தம்பிக்கு எந்த ஊரு படத்தில் ரஜினி-மாதவி மோதல் செம..மாதவி அல்லாது வேறு நடிகை அந்தப்பாத்திரத்தில் நடித்திருக்க முடியுமா? இதே டைப்பில் பொல்லாதவனில் ஸ்ரீப்ரியா, மாவீரனில் அம்பிகா, தனிக்காட்டு ராஜாவில் ஸ்ரீதேவி, மாப்பிள்ளையில் அமலா, தங்கமகனில் பூர்ணிமா என 'மோதலுக்குப்பின் காதல்' என நடித்திருந்தாலும் உச்சத்தில் இருப்பவர் மாதவி தான்.
மன்னன் படத்தில் விஜயசாந்தி செய்த ரோலை அதன் மூலப்படமான 'அனுராக அரளிது'வில் செய்தது மாதவி தான். நாயகன் ராஜ்குமார். 1979லேயே ரஜினியோடு 'இத்தரு அசாத்யுலே' படத்தில் ரஜினியோடு மாதவி ஜோடி சேர்ந்தார். 
விஜயலட்சுமி என்கிற சில்க் பிறந்த அதே ஏலூருவில் பிறந்த இந்த கனக விஜயட்சுமி   1969லேயே .ஆதர்சகுடும்பம் படத்தில் ஜெயலலிதாவோடு நடித்தவர். (அதனாலோ என்னவோ 'ஜெயலலிதா' செய்த ரோல்கள் போலவே வந்தன)
அபூர்வராகங்கள் படத்தில் ஜெயசுதா செய்த ரோலை தெலுங்கில் மாதவி செய்து திரையுலகில் கால் பதித்தார். பாலச்சந்தர் 'ஏக் துஜே கேலியே' மூலம் ஹிந்திக்கு கொண்டு போனார். ஹரிஹரன் 'லவா' படம் மூலம் கேரளத்துக்கு கொண்டு சென்றார். புதியதோரணங்கள் மூலம் கலைஞானம் தமிழுக்கு கொண்டு வந்தார். கர்ஜனை மூலம் கன்னடத்துக்கு போனார்.

நிம்மதியற்ற ஒரு வேளையில், ஹிமாலயத்தில் உள்ள 'ஸ்வாமி ராமா'வை சந்திக்க அவர் "மாதவி...இவர் தான் உன் ஸ்வாமி" என ரால்ஃப் சர்மாவை காட்ட ரால்ஃபும் மாதவியை ஏற்க திருமணம் முடிந்து மூன்று வளர்ந்த பெண் குழந்தைகளோடு நியூ ஜெர்ஸியில் குடும்பப்பெண்ணாக வசிக்கிறார் 

இந்த 'திமிருக்கே பிடித்தவள்'...Selvan Anbu

Leave a Reply