TamilsGuide

அரசியலமைப்பின் பிரகாரமே புதிய அரசாங்கத்தை நிறுவ வேண்டும்

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக நிலைநாட்டப்பட்டதன் காரணமாகவே, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஸ்ரீ ஜெயவர்தனபுர விசேட அதிரடிப் படை நடவடிக்கை மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  பாதாள உலகக் குழுகளுக்கோ அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கோ நாட்டை அழிக்க இடமளிக்க முடியாது.

இலங்கையில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும். நாட்டு மக்களை சட்டம் ஒழுங்கின் கீழ் வாழ இடமளிப்பது என்பது, அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.

அடுத்த மாதத்தில், உங்களுக்கு இன்னொரு பாரிய பணியொன்று உள்ளது. ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, இத்தேர்தலை சட்டரீதியாக நடத்த வாய்ப்பளிப்பது பொலிஸ் திணைக்களத்தின் கடமையாகும்.

ஜனாதிபதி என்ற வகையில் என்றுடையதும், தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் கடமையும் ஆகும். அது மாத்திரமன்றி, தேர்தலுக்குப் பின்னரும் வன்முறைச் செயல்கள் நடப்பதற்கு இடமளிக்க முடியாது.

நாம் அவற்றை நிறுத்த வேண்டும். இந்தத் தேர்தலுக்குப் பின்னர் எந்த வகையிலும் வன்முறைகள் நடைபெறக் கூடாது. அது குறித்து நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணப்பட்டதாலேயே இன்று இந்தத் தேர்தலை நடத்த முடிந்துள்ளது.

நமது அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளதால், நாம் அரசியலமைப்பின் பிரகாரமே புதிய அரசாங்கத்தை நிறுவவேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment