• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துணை நடிகை வாணிஸ்ரீ நாயகியான கதை 

சினிமா

கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த வாணிஸ்ரீ துணை நடிகையாக வாழ்க்கையை தொடங்கியவர்

எம்ஜிஆருடன் கண்ணன் என் காதலன், தலைவன், ஊருக்கு உழைப்பவன் என மூன்று படங்களிலும், சிவாஜியுடன் உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை, வாணி ராணி உள்பட 10 படங்களிலும் நாயகியாக நடித்தவர் வாணிஸ்ரீ. இவை தவிர ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அன்றைய முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்

தெலுங்கு, கன்னட படங்கள் தனி.அறுபதுகளின் இறுதியிலிருந்து எழுதுபதுகளின் இறுதிவரை தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த வாணிஸ்ரீ துணை நடிகையாக வாழ்க்கையை தொடங்கியவர். நாயகிக்கு தோழியாக நடித்தவர்களில் 99.9 சதவீதம் பேர் அதுபோன்ற வேடங்களில் நடித்தே தங்கள் காலத்தை ஓட்டியாக வேண்டும். விதிவிலக்காக ஒன்றிரண்டு பேரே நாயகியாகி புகழ்பெறுவதுண்டு. வாணிஸ்ரீ அவர்களில் ஒருவர்

வாணிஸ்ரீ நாயகியானது சினிமாவை மிஞ்சும் கதை. ஜோசப் தளியத் மலையாளத்தின் முக்கியமான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். இவர் தமிழில் தனது சிட்டாடல் நிறுவனத்தின் சார்பில் இரவும் பகலும் என்ற படத்தை ஜெய்சங்கரை வைத்து எடுத்து வெளியிட்டார். படம் வெற்றி பெற்றது. அதனால், உடனடியாக அடுத்தப் படத்தை தொடங்கினார். படத்தின் பெயர் காதல் படுத்தும்பாடு. இதிலும் ஜெய்சங்கர்தான் நாயகன். காதலிக்க நேரமில்லை படத்தின் நாயகிகளில் ஒருவரான ராஜஸ்ரீயை நாயகியாக ஒப்பந்தம் செய்வதாக திட்டம். நடிக்க அவருக்கும் சம்மதம். ஆனால், அந்த நேரத்தில் ராஜஸ்ரீ காதலிக்க நேரமில்லை படத்தின் இந்தி, தெலுங்குப் பதிப்புகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் காதல் படுத்தும்பாடு படத்துக்கு கால்ஷீட் தர முடியவில்லை.

இந்த குளறுபடிகள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தெலுங்குப் படப்பிடிப்புக்கு சென்ற, காதல் படுத்தும்பாடு படத்தின் கதாசிரியர் கலைஞானம் ராஜஸ்ரீக்கு தோழியாக நடித்த பெண்ணை பார்த்திருக்கிறார். அவர் நாயகியைவிட அழகாக இருக்க, அவர் யார் என யூனிட்டில் விசாரித்த போது அவருக்கு வியப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண், அவரது சென்னை வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளி வடை சுட்டு விற்கும் பெண்மணியின் கொழுந்தியாள் மகள். ஆந்திராவைச் சேர்ந்தவர். பட வாய்ப்புக்காக சென்னை வந்திருக்கிறார். துணை நடிகையாக படங்களில் தலைகாட்டுவதோடு காங்கிரஸின் பிரச்சார நாடகங்களிலும் நடித்து வந்திருக்கிறார்.

ராஜஸ்ரீயின் தோழியாக நடிக்கும் துணை நடிகை வாணிஸ்ரீ குறித்து கலைஞானம் ஜோசப் தளியத்திடம் சொல்ல, அவரும் வாணிஸ்ரீயை வரவைத்துப் பார்த்திருக்கிறார். பளிச்சென்ற அவரது அழகுப் தளித்துக்கு பிடித்துப் போகிறது. அவரது தயாரிப்பு நிறுவனத்தில்  உள்ளவர்களில் பலரும் துணை நடிகை நாயகியா என்று தயங்கியதை புறந்தள்ளி வாணிஸ்ரீயை நாயகியாக்கினார். அப்படி, துணை நடிகையாக இருந்த வாணிஸ்ரீ 1966 இல் வெளிவந்த காதல் படுத்தும்பாடு படத்தில் நாயகியானார். இந்தப் படத்தின் மூலம் வெளியுவலகுக்கு தெரிய வந்த இன்னொரு நடிகை ஜெயந்தி. பாலசந்தரின் பல படங்களில் பிற்காலத்தில் நாயகியாக நடித்தவர். அவரும் சிறு வேடங்களில் நடித்து வந்தவர்தான். காதல் படுத்தும்பாடு படத்தில் இரண்டாவது நாயகியாக இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. படமும் ஹிட்டாகி பலருக்கு வாழ்வு தந்த படமாக மாறியது.

வாணிஸ்ரீ இந்தப் படத்துக்குப் பிறகு முன்னணி நடிகையானார். எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தார். 1078 இல் கருணாகரன் என்ற மருத்துவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய வாணிஸ்ரீ 1989 இல் ஒருசில தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்தார். தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும் தலைக்காட்டினார். 2020 இல் இவரது மகன் வினய வெங்கடேஷ கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வடை சுட்டு பிழைத்து வந்த வீட்டில் வளர்ந்த வாணிஸ்ரீ துணை நடிகையாகி, நாயகியாகி, புகழின் உச்சியை அடைந்தது சினிமபவைவிட சுவாரஸியமான நிஜக்கதை.

இன்று பிறந்தநாள் காணும் வாணிஸ்ரீ அவர்கள் பல்லாண்டு காலம் நலமோடும் வளமோடும் வாழ்கவென மனதார வாழ்த்துவோம்.. 

G Laksmanan

Leave a Reply