• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தல் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட நடவடிக்கை

இலங்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கும், இக்காலப்பகுதியில் தேர்தல் சார்ந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதன்படி, வாக்களிப்பதற்கும், அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களில் பங்கேற்பதற்கும் இலங்கை மக்கள் கொண்டிருக்கும் உரிமையை அங்கீகரிக்கும் அதேவேளை, அவ்வுரிமைகள் குறிப்பாக தேர்தலுக்கு முன்னைய, தேர்தல் தினத்தன்று மற்றும் தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தாம் சில விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பொலிஸாரும், அரச அதிகாரிகளும் நாட்டின் அரசியலமைப்புக்கு மதிப்பளித்து, அவர்களது கடமைகளையும் பொறுப்புக்களையும் முழுமையாக நிறைவேற்றவேண்டியதன் அவசியத்தை மீள்வலியுறுத்தி அவர்களுக்கான விசேட வழிகாட்டல்களை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அத்துடன், பொலிஸாரும், அரச அதிகாரிகளும் சட்டத்தின் பிரகாரம் சகல தரப்பினருக்கும் சமத்துவமான பாதுகாப்பை வழங்கவேண்டியது அவசியம் எனவும், எவ்வகையிலும் பக்கச்சார்பான நிலைப்பாட்டையோ, ஒடுக்குமுறை சிந்தனையையோ வெளிப்படுத்தக்கூடாது எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புபட்ட வகையில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து முறைப்பாடளிப்பதற்கான விசேட தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 076 791 4695 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமோ அல்லது 011 2505566 என்ற தொலைநகல் இலக்கத்தின் மூலமோ அல்லது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமோ தேர்தல் சார்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்க முடியும் என ஆணைக்குழத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்திலும், பிராந்திய அலுவலகங்களிலும் இதற்கென சிறப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply