• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியா கொலை வழக்கு

இலங்கை

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் விசாரணைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனுக்கள், 5 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டது.

இந்த வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பிரதிவாதி சார்பில் முன்னிலையாகிய  சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, இந்த பிரதிவாதிகள் 08 வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரதி மன்றாடியார் நாயகம் ஆயிஷா ஜினசேன மன்றிற்கு தெரிவித்தார்.

பிரதிவாதிகள் கொலை, சதி மற்றும் சட்டவிரோத குடியேற்றம் ஆகிய குற்றங்களில் குற்றவாளிகளாக காணப்பட்டதாக தெரிவித்த அவர், யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பிரதிவாதிகள் இருவர் விடுவிக்கப்பட்டதாகவும் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனையடுத்து வழக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பிரதிவாதிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மன்றாடியார் நாயகத்துக்கு உத்தரவிட்டது.

அத்துடன், வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தி வைக்கப்பட்டுவதாகவும்  உத்தரவிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply