• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலத்தை வென்ற பெருந்தலைவர் காமராஜர்.பிறந்த தின சிறப்பு பகிர்வு.

சினிமா

பெருந்தலைவர் என்றும், கிங் மேக்கர் என்றும், கல்விக் கண் திறந்தவர் என்றும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின்  பிறந்தநாள் .

ஒவ்வொரு சிலையுமே, சில செய்திகளைப் பேசும். அந்த வகையில், தமிழ்நாட்டில் பெண், ஆண் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதுபோல இருக்கும் ஒரு தலைவரின் சிலை, தற்கால தலைமுறையைப் படிக்கவைத்த வரலாற்றைப் பேசுகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இன்றைக்கு நாம் படித்து, சமூகமாக மலர்ந்திருப்பதற்கு, அன்றைக்கே விதைபோட்ட அந்தத் தலைவர் கர்மவீரர் காமராஜர்.

பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர். விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 ஜூலை 15 அன்று மகனாகப் பிறந்தவர் காமராஜர். எளிய குடும்பத்தில் பிறந்தவர், 6 வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தார். 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே பள்ளிச் செல்வதை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானவர். தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காக திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர். எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார்.

பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் 11-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தார். பதவியைச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவே கருதினார். சேவையில் முழுநேரம் ஈடுபடுவதற்காகப் பதவியைத் துறக்கவும் அவர் தயங்கியதில்லை. ஏழை எளிய மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, இந்தியாவில் தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமை தேடித் தந்தார். ஜவஹர்லால் நேரு மறைந்தபோது இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தனிப் பெருந்தலைவராக காமராஜர் செயல்பட்டார்.

காமராஜர் கர்ம வீரர் என்றும், கிங் மேக்கர் என்றும், ஏழைப் பங்காளன் போன்றும் போற்றப்பட்டவர். இளம் வளதியலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பல முறை சிறை சென்றார். நாட்டு விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையிலிருந்தார். 1940-ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். 1964-ல் அகில இந்திய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமரை இருமுறை தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர் காமராஜர். அதனால்தான் அவர் ‘கிங் மேக்கர்’ என அழைக்கப்படுகிறார்.

1955-ல் கடும் புயலாலும் பெருமழையாலும் ராமநாதபுரம், கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, நிவாரணப் பணிக்காக மின்னல் வேகத்தில் அந்தப் பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் காமராஜர். வெள்ளக்காட்டில், மார்பளவு நீரில் சாரக்கயிற்றைப் பிடித்துக்கொண்டு இறங்கி, ஒரு கால்வாயைக் கடந்து மறுகரைக்குச் சென்று மக்கள் பணியாற்றினார். ஒரு முதலமைச்சரே இப்படிக் களமாடுகிறாரே என அப்போது அனைவரும் மெய்சிலிர்த்து, பாராட்டினர்.

இது குறித்து `திராவிட நாடு’ இதழில், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அண்ணா, ``மக்களின் கண்ணீரைத் துடைக்க எமது முதலமைச்சர் விரைந்து சென்றிருக்கிறார்.

கோட்டையிலே உட்கார்ந்துகொண்டு உத்தரவுபோடும் முதலமைச்சர் அல்ல இவர். ஆண்டவன் கோபத்தாலே நேரிட்ட சோதனை என்று பேசிடும் பூசாரியும் அல்ல” என்று மனமுவந்து பாராட்டி எழுதினார். சிறந்த அரசியல் நாகரிகம் என்று இவையெல்லாவற்றையும் மூத்த அரசியல் தலைவர் ஆ.கோபண்ணா தமது ' காமராஜ் ஒரு சகாப்தம் ' என்ற புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார்.

ஒருநாள் காமராஜரைச் சந்திக்க வந்த செல்வந்தர் ஒருவர், கோவையில் மருத்துவக் கல்லூரி அமைக்க ரூபாய் 20 லட்சம் தருவதாகவும், மீதி ரூபாய் 80 லட்சத்தை அரசு கொடுத்தால் ரூபாய் 1 கோடியில் தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்கலாம் என்கிற திட்டத்தை முன்வைத்தார். இதற்கு துறைரீதியான அமைச்சரும் ஆதரவாக இருந்தார். இதைப் பொறுமையாக கேட்டபடியே இருந்த காமராஜர், 'அதற்குப் பேசாமல் மீதி இருக்கிற ரூ 20 லட்சத்தையும் சேர்த்து ஒரு கோடி போட்டு அரசாங்கமே மருத்துவ கல்லூரி கட்டிவிடலாமே' என்றார். சொன்னதோடு மட்டுமல்லாமல் உடனடியாக தஞ்சாவூர் ஜில்லா போர்டு ரயில்வே செஸ் வரியாகச் சேமித்த ரூபாய் 1 கோடி இருப்பதை அறிந்து, அதைப் பயன்படுத்தி தஞ்சையில் மருத்துவக் கல்லூரி அமைக்க காமராஜர் நடவடிக்கை எடுத்தார்.

அப்படித்தான் தஞ்சை மருத்துவக் கல்லூரி உருவானது. சேவைத்துறையான மருத்துவத்தில் தனியாரை அனுமதித்தால், அவர்கள் அதை லாபம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக மாற்றிவிடுவார்கள், இது ஏழைகளுக்கு ஆபத்தாகிவிடும் என்றே அன்றைக்கு அதைத் தடுத்தார் காமராஜர். இன்றைய நிலைமையை வாசகர்கள் நீங்களே பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள்.

சுதந்திர இந்தியாவின் தொடக்கத்தில் எந்த வளர்ச்சியையும் காணாத கிராமங்களில் முதன்முறையாகச் சாலைகளும், மின் இணைப்புகளும், கல்விக்கூடங்களும், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முறையும் வந்தது என்றால், அதற்கு காமராஜரின் ஆட்சிதான் காரணம். அந்த அளவுக்கு உள்கட்டமைப்புகளை வலுப்படுத்திய முதலமைச்சராக இருந்தார்.

அதோடு, 1936-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலராகவும், 1937-ல் எம்.எல்.ஏ.வாகவும், 1940 முதல் 1954 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராகவும், 1941-ல் விருதுநகர் நகராட்சி தலைவராகவும், 1946-ல் எம்.எல்.ஏ.வாகவும், 1947-ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், 1949-ல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராகவும், 1952-ல் எம்.பி.யாகவும், 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகவும், 1963 முதல் 1967 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் 1969 மற்றும் 1971ல் எம்.பி.யாகவும் பொறுப்பு வகித்தவர் காமராஜர். 1972-ல் தாமிர பத்திர விருதும், 1976-ல் பாரத ரத்னா விருதும் பெற்றவர். காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளில் 1975-ல் காமராஜர் மறைந்தார்.

பல்வேறு பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராஜரின் விருதுநகர் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தில், பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின்  பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று (15ம் தேதி) கொண்டாடப்பட்டு வருகிறது.

காமராஜர் பிறந்த பிறந்த ஊரான விருதுநகரில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் இன்று காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலமாக பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுவதால் விருதுநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Malaichamy Chinna C

Leave a Reply