• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வசந்தமாளிகையை ஏன் இன்னமும் கொண்டாடுகிறார்கள்?! 

சினிமா

வசந்தமாளிகை'யை ஏன் இன்னமும் கொண்டாடுகிறார்கள்?!'' உலகப்புகழ் பெற்ற அதிசயங்களில் ஒன்றானதும்,
இந்திய வரலாற்றில் காதலின் சின்னமாகவும் விளங்கும் "தாஜ்மஹால் "எவ்வாறு பெருங்கீர்த்தி கொண்டதோ அவ்வண்ணமே இந்திய சினிமா வரலாற்றில் காதலின் சிறப்பை பிரமாண்டமானதாக காட்டிய, நடிப்பு பல்கலைக்கழகம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் உருவான இமாலயவெற்றிக்காவியம் "வசந்தமாளிகை" என்ற காதல் காவியம்.
 இத்திரைப்படம் வெள்ளித்திரையில் வசந்தகாலமாய் அமைந்து 50 ஆண்டுகள் ஆகப்போகின்றது . . இந்திய சினிமா வரலாற்றில் காதலின் அடையாளமாக முத்திரை பதித்த படங்கள் பல. அதில் தேவதாஸ், அக்பர், லைலாமஜ்னு ,செம்மீன் போன்ற படங்களைக் குறிப்பிடலாம். அந்த வரிசையில் பிரமாண்டமானதாக அமைந்தது
"வசந்தமாளிகை ".
இதற்குப் பின் கமலஹாசனின் மரோசரித்ரா,ஏக் தூ ஜே கேலியே என சில காதல் காவிங்களை கூறலாம். எனினும் "வசந்தமாளிகை" எடுக்கப்பட்ட விதம் போல் வேறெந்த படமும் அமையவில்லை. ஏனெனில் இப்படத்தில் பங்களிப்பு கொண்ட அனைத்து கலைஞர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள்,கதைக்கேற்ப பின்னணி இசை வழங்கிய திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்,
படத்தின் ஒவ்வொரு காட்சிகளுக்கேற்ப பாடல்கள் வரிகளை புனைந்த பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன்,பாடல்களை உயிரைக் கொடுத்து அருமையாக பாடிய சௌந்தரராஜன்,சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி விறு விறுப்பாக கதைக்களம் அமைத்த கௌசல்யா தேவி,காட்சிகளுக்கமைய வசனம் எழுதிய பாலமுருகன்,மனதை நெருடும் வகையில் ஒளிப்பதிவு செய்த வின்சென்ட், 
நேர்த்தியாக ஜனரஞ்சகமாக படத்தை இயக்கிய.கே.எஸ்.பிரகாஷ்ராவ்,
எல்லாவற்றுக்கும் மேலாக படத்தை பிரமாண்டமாக தயாரித்த டி.ராமாநாயுடு(விஜயா சுரேஷ் கம்பைன்ஸ்) (தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் தந்தை).இவர்களின் மேலான கடும் உழைப்பில் உருவான "வசந்தமாளிகை" இன்றளவிலும் காலத்தால் அழியாத "காதல் மாளிகை
.தெலுங்கு படமான
"பிரேம் நகரி"ல் இறுதியில் கதாநாயகன்(நாகேஷ்வரராவ்) விஷம் குடித்து மரணிப்பதாக கதைக்களம் அமைத்த இதே கூட்டணி "வசந்தமாளிகை"யிலும் இவ்வாறே இறுதி காட்சியை அமைத்து படத்தை வெளியிட்டனர்.

ஆனால் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர்களால் இம்முடிவைத் ஜீரணிக்க இயலவில்லை. எனவே மீண்டும் படப்பிடிப்பு நடத்தி நாயகனை உயிர்ப்பிழைக்க வைத்து காதலர்கள் இணைவதாக முடிவை மாற்றியமைத்தனர்
"பிரேம் நகரை"விட "வசந்தமாளிகை" வசூலில் பெரும் சாதனை படைத்தது.திரையிட்ட அனைத்து தென்னகத் திரையரங்குகளிலும் 300,250,200,150,100 நாட்கள் என கடந்து ஓடி சாதனை படைத்தது. 
இலங்கை கொழும்பில் 300 நாட்களும், யாழ்ப்பாணத்தில் 272 நாட்களும் ஓடி சாதனை படைத்தது. ஒரே ஒரு பிரதியை வைத்து கிங்ஸ்லி,கெப்பிட்டல் போன்ற திரையரங்குகளிலும்,இதே போல் யாழில்,ஓரே பிரதியை கொண்டு லிடோ,வெலிங்டன் திரையரங்குகளில் படத்தை 272 நாட்கள் வரையும் ஒட்டினர்.
இலங்கை சினிமா வரலாற்றில் இதுவோர் தொழில் நுட்ப சாதனை என்றே கூறவேண்டும். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இன்றளவிலும் ஜனரஞ்சகமானவைகள். ‘’வாணிஸ்ரீயோட புடவைக்கட்டு ஸ்டைலுக்கு வசந்தமாளிகைதான் பெஸ்ட் மூவி.
 படத்துல பல இடங்கள்ல, சிவாஜியோட நடிப்பை மறந்து, வாணிஸ்ரீயோட நடிப்பை மறந்து, அவரோட புடவை மடிப்பையும் அதான் அந்த ப்ளீட்ஸையும் பார்த்து மெய்ம்மறந்து போயிருக்கோம்’’ என்று சொல்லாத பெண்களே இல்லை.
மற்றும் படத்தில் போடப்பட்டுள்ள அமைப்புகள் (செட்) மிக பிரமாண்டம். மயக்கமென்ன பாடல் காட்சிக்காக அமைக்கப்பட்ட
அரங்க நிர்மாணங்கள் பிரமிப்பு மிக்கவை. அப்பாடலுக்கு முன் சிவாஜி பேசும் வசனங்கள் அபாரம் . காதலில் தோற்றவர்களுக்கு,
"இரண்டு மனம் வேண்டும்" எனவும்,காதலிக்காக கட்டப்பட்ட அரண்மனை போன்ற பெரிய மாளிகை,அவள் தனக்கில்லை என்றானபின் அது எதற்கு என்பதை சோகத்துடன் சொல்லும் , "யாருக்காக இந்த மாளிகை வசந்தமாளிகை" போன்ற பாடல்கள் என்றும் காலத்தால் அழியாத கானங்கள்.
இலங்கை வானொலியில் அக்காலத்தில் இப்படத்தின் பாடல்கள் ஒலிபரப்பாகாத நாட்களே கிடையாது."ஒலிச்சித்திரம்"என்ற ஒரு நிகழ்ச்சியில் இப்படத்தின் கதை வசனத்தை ஒரு மணிநேரம் ஒலிபரப்பு செய்வார்கள். இதன் கதை வசனத்தை ஒரு கூட்டமே ஒவ்வொரு குடும்பங்களில் வானொலி பெட்டியைச் சுற்றி அமர்ந்து செவிமடுக்கும்.
"ஒலிச்சித்திரம்"விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் அளிக்கும் "வசந்தமாளிகை"என இலங்கை வானொலியின் அபிமான நட்சத்திர அறிவிப்பாளர் அமரர் திருமதி ராஜேஷ்வரி ஷண்முகத்தின் தேமதுர குரல் ஒலிக்கும்.மேலும் கே.எஸ் ராஜா தொகுத்து வழங்கும் "திரைவிருந்து" நிகழ்ச்சி வாயிலாக ஓடாத படங்களையும் வெற்றியாக்கிய பெருமை கே.எஸ்.ராஜாவின் சிம்மக்குரலுக்குண்டு என்பதையும் சொல்லியாக வேண்டும்
.அதே போல் "வசந்தமாளிகை" படத்தின் சாராம்சத்தையும் அழகாக இந்நிகழ்ச்சி மூலம் தொகுத்து வழங்கிய பாணியையும் என்றும் மறக்க முடியாது.
மேலும் இப்படத்தில் இடம்பெற்ற "அடியம்மா ராஜாத்தி"என்ற பாடல் படத்தின் நீளம் காரணமாகவும்,டப்பாங்குத்து வகையில் அமைந்ததற்காகவும்,படத்தின் மென்மையான போக்கை இப்பாடல் சிதைத்து விடும் என்ற எண்ணத்தினாலும் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டது. 
பல யுகங்கள் கடந்தாலும் "வசந்தமாளிகை"போன்ற படங்கள் ரசிகர்கள் மனம் எனும் மாளிகைகளில் பூகம்பத்தாலும் அழியாத ஸ்த்திரமான மாளிகையாகும்.
 "வசந்தமாளிகை"சிவாஜிக்கு 159 வது படமாகும். இப்படத்தின் வெற்றி சிவாஜி ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை தந்திருந்தாலும்,சிவாஜி கணேசனுக்கு ஒரு சோகத்தை தந்தது, ஆம் "வசந்தமாளிகை" படப்பிடிப்பின் போதுதான் 
நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் அன்புத்தாயார் திருமதி ராஜாமணி அம்மையார் காலமானார்.
எனினும் படப்பிடிப்பை தயாரிப்பாளர் வேண்டுகோளின்படி தள்ளி வைக்காமல் தாய்க்கு செய்ய வேண்டிய ஈமச்சடங்குகள் அனைத்தையும் செய்து விட்டு படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்தார்."

 

நன்றி எஸ். #கணேசன் ஆச்சாரி சதீஷ்
கம்பளை.
 

Leave a Reply