• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பௌத்த கல்வியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை விட்டுக்கொடுக்கப் போவதில்லை

இலங்கை

“நாடு எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் பௌத்த கல்வியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்கள் வழங்கும் வேலைத்திட்டத்தின் புதிய கட்டத்தை இன்று நாம் ஆரம்பித்துள்ளோம்.

சமய மாணவர்களுக்கும் இந்த புலமைப்பரிசில்களை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இவர்களுக்கான நிதிகளை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நாம் மாற்றியுள்ளோம். இந்த உதவித் திட்டத்திற்கு ஒரு பின்னணி உள்ளது.

கடந்த 4 வருடங்களில் இந்நாட்டு மக்கள் எதிர்கொண்டிருந்த துன்பங்களை நான் சொல்லத் தேவையில்லை. பொருளாதாரத்தின் வங்குரோத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாகியுள்ளது.

எனவே அரசாங்கம் என்ற வகையில் நாம் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடமைப்பட்டுள்ளோம். அதற்காக அஸ்வசும, உறுமய போன்ற பல்வேறு திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களின் கல்வியைத் தொடர்வதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பல புலமைப்பரிசில் திட்டங்களை தற்போது நான் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

நாட்டில் துறவிக் கல்விக்கான கற்றல் செயற்பாடுகள் எந்த காரணத்திற்காகவும் வீழ்ச்சியடைவதை நான் அனுமதிக்க மாட்டேன். பௌத்த சமய ஒழுங்கு முறையில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

நாட்டில் புதிய தலைமுறைக்கா பிக்குகளை கட்டியெழுப்புவதற்கு தேவையான பின்னணியை நாம் தயார் செய்ய வேண்டும். அதற்காக அரசாங்கம் செய்யக்கூடிய முக்கியமான செயற்பாடுதான் இந்த புலமைப்பரிசில் திட்டமாகும்.

நாட்டில் தொடர்ந்து பௌத்த கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
நாட்டில் எந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இந்த கடமையில் இருந்து எவரும் மீறிச் செல்லமுடியாது.

நாடு எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் பௌத்த மதக் கல்வி தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply