• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எதிர்காலத்தை நினைத்தே மக்கள் வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்

இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்கள் தமது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்  என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.

குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் இன்று  இடம்பெற்ற “விகமனிக ஹரசர” நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

கடந்த பொருளாதார நெருக்கடியின்போது நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இது பெரும் பலமாக இருந்தது.

நாட்டிற்கு அந்நியச் செலாவணி, ஈட்டித்தந்துவிட்டு நாடு திரும்புபவர்களுக்கு புதிய வாழ்க்கையைத் தொடங்க அரசாங்கம் ஆதரவு அளித்துள்ளது.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது, ​​நீங்கள் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்தீர்கள். அவ்வாறு நிதி கிடைக்கவில்லை என்றால் நமது பொருளாதாரம் மீண்டு வராது.

நீங்கள் நாட்டுக்கு அனுப்பிய ஒவ்வொரு டொலருக்கும் மதிப்பு அதிகம். அதற்காக அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

எப்பொழுதும் கடன் பெற்று பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது.

இதுவரை நாம் பெற்ற வெளிநாட்டு கடனைத் திருப்பி செலுத்தும் வகையில் சலுகைகளைப் பெற்றுள்ளோம். ஆனால் கடனை திருப்பிச் செலுத்துவதால் மாத்திரம் நமது பிரச்சினைகள் தீர்ந்துவிடாது.

நமது அந்நிய செலாவணியை அதிகரிக்க வேண்டும். தேவையான அளவு அந்நியச் செலாவணி கிடைக்கும் வரை கடன் பெறவேண்டியுள்ளது. நாம் கடன் பெறும்போது, ​​நம் கடன் அதிகரிக்கிறது. எனவே, அந்நியச் செலாவணி அளவை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு தொழிலுக்குச் செல்பவர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பது அவசியம். தொழிலை முடித்துவிட்டு நாடு திரும்பும் போது தொழில்சார் அறிவு கொண்ட தொழில் முயற்சியாளர்களாக உங்களை மாற்றத் தேவையான வேலைத் திட்டத்தைத் தயார் செய்யுமாறு அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். நாம் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும்.

வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதுடன் சுற்றுலாப் பயணிகளையும் நாட்டுக்கு அழைத்து வர வேண்டும். இந்தப் புதிய பாதையில் நாடு முன்னேற வேண்டும்.

அரசியல் என்பது, பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதோ, முகத்தைப் பார்த்து வாக்களிப்பதோ அல்ல. தமது எதிர்காலத்தை நினைத்து வாக்களிக்க வேண்டும். அதன்போது உங்கள் அனைவருக்கும் இருக்கும் பொறுப்பை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply