• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இயக்குநர் இமயம்  பாரதிராஜாவின் பிறந்தநாள் 

சினிமா

தமிழ் சினிமாவின் திசைவழிப்போக்கினை பல்வேறு இயக்குநர்கள் மாற்றி அமைக்கும் கனவோடு களமிறங்கியுள்ளார்கள். ஆனால் 80களில் தான் இயக்குநராக அறிமுகமான முதல் படத்தில் இருந்தே தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் பாரதிராஜாவை தமிழ் சினிமாவின் ஐகான் எனக் கூறுவது முற்றிலும் பொருத்தமானதுதான்.

நடிகராகவேண்டும் என சென்னையை நோக்கி வந்த பாரதிராஜாவின் திரை வாழ்க்கை மிகவும் பெரியது. அவரது 83வது பிறந்த நாளில் இது குறித்து பார்க்கலாம். ஓடிடி, தனது முதல் படமான 16 வயதினிலே படத்தின் மூலம் அனைவரது மனதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். இந்த படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி என அனைவரையும் யாருமே கற்பனை செய்து பார்க்காத கதாபாத்திரங்களில் நடிக்கவைத்தது மட்டும் இல்லாமல், படத்தினை மக்களுக்கு புரியும் எளிய மொழியில், மக்கள் தங்களை கதாபாத்திரங்களுடன் இணைத்துக் கொள்ளும் அளவிற்கு படத்தின் திரைக்கதையை அமைத்தது மட்டும் இல்லாமல், கதாபாத்திர வடிவமைப்பையும் சிறப்பாகவே செய்திருந்தார். 

இந்த படம் மட்டும் இல்லாமல் இவர் தொடர்ந்து இயக்கிய ஐந்து படங்களும்(16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள்) யாருமே கற்பனை செய்து பார்க்காத அளவிற்கு தொடர் வெற்றிப் படங்களாக அமைந்தது. அனைத்து படங்களும் 200 முதல் 300 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி, பாரதிராஜாவை மாபெரும் இயக்குநராக உச்சத்தில் அமரவைத்தது.  

பாண்டியன், கார்த்திக்: இதனால் தயாரிப்பாளர்கள் பாரதிராஜாவின் பேச்சுக்கு மறுப்பு சொல்லமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும், தான் ஒரு வித்தியாசமான மனிதரை கவனிக்கின்றார் என்றால் அவரை முழுவதுமாக மனதில் ஒரு கதாபாத்திரமாக மாற்றிவிடும் அளவிற்கு தனது மனதிற்குள் காட்சிகளை ஓட்டிவிட்டுப் பார்த்து விடுவார். இப்படி தன்னை ஈர்த்த மனிதர்களான வளையல் கடை வியாபாரி நடிகர் பாண்டியனாக மாறினார், வீட்டுத்திண்ணையில் விளையாடிக்கொண்டு இருந்த கார்த்திக்கை கதாநாயகனாக மாற்றியதும் இவர்தான்.

வேதம் புதிது: கிராமத்துக் கதைகளில் உறவுகளுக்கு இடையில் இருக்ககூடிய அன்பை தனது படங்களின் மூலம் மண்வாசனையோடு சேர்த்துச் சொல்லுவதில் வித்தகராக இருந்த பாரதிராஜா. இந்த சாதிய சமூகத்தின் மீது பெரிய கல்லை விட்டெறிந்த படம்தான் வேதம் புதிது. இந்த படத்தில் வரக்கூடிய, " பாலு என்பது உங்க பேரு, தேவர் அப்படிங்கறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா?" என வரும் வசனம் இன்றைக்கும் விவாதத்தை ஏற்படுத்தும் வசனங்களில் ஒன்றாக உள்ளது. 

தகப்பனாக தனது மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்திருந்தாலும், அவருக்குள் இருந்த இயக்குநர், கண்களால் கைது செய் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட தனது மகன் மனோஜை நீக்கிவிட்டு, பல்லடத்தில் உள்ள திரையரங்க உரிமையாளர் மகன் ஃபசலை நடிக்கவைத்தார். அதற்கு காரணம் அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு மேட்டிமைத் தனம் தேவைப்படுகின்றது. அது ஃபசலிடம் இயல்பாகவே இருக்கின்றது என கூறி ஃபசலை நடிக்க வைத்தார். இதுதான் பாரதிராஜாவின் திறமை எனக் கூறலாம். 

விருதுகள்: இவரது கலைப் பயணத்தைப் பாராட்டி இவருக்கு இந்திய அரசி பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார். மேலும் மூன்று தமிழ்நாடு அரசு விருது ஒரு ஃபிலிம் ஃபேர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 43 படங்களை இயக்கி அசத்தியுள்ளார். தற்போது தனக்கு விருப்பமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் பாரதிராஜா தனக்குள் இருக்கும் நடிகனுக்கும் கொஞ்சம் தீனி போட்டுக்கொண்டு உள்ளார். ஒரு கலைஞனாக திரையில் மட்டும் பேசாமல், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிக்கொண்டுள்ள கலைஞர்களில் பாரதிராஜாவும் ஒருவர். 83 வயதினை எட்டியிருந்தாலும் தனது வயது மூப்புக்கும் மத்தியில் திரைத்துறையில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களை மகிழ்வித்து வருகின்றார். தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் கலைஞனாக பல்லாண்டு வாழ பிறந்தநாள் வாழ்த்துகள்!

நன்றி மோகன்ராஜ் தங்கவேல்
பீலிமி பீட்

Leave a Reply