• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆரம்பமானது ஆடிப்பிறப்பு

இலங்கை

ஜூலை மாதம் 17ஆம் திகதியான இன்று  தமிழர்கள் விமர்சையாக ஆடிப் பிறப்பினைக்  கொண்டாடி வருகின்றனர்.

ஆடிப்பிறப்பு என்றதுமே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் தங்கத் தாத்தா என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  நவாலியூர் சோமசுந்த புலவர். அவர் ஆடிப்பிறப்பின் சிறப்பு மற்றும் ஆடிக்கூழ் காய்ச்சும் முறை தொடர்பாக எழுதிய ”ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே… கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுகட்டை தின்னலாம் தோழர்களே…” என்ற பாடல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானது.

எமது முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.

சைவ சமயத்தில் இந்த நாளை தேவர்களுடன் தொடர்பு படுத்தி வழிபடுகின்றனர். இந்நிலையில் இன்று வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வானது, தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவர் சிலையடியில் சிறப்பாகக்  கொண்டாடப்பட்டது.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சோமசுந்தரபுலவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விபுலாநந்தா கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததுடன் ஆடிக்கூழ் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply