TamilsGuide

யாழில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் - சபாநாயகருக்கு சிறிதரன் கடிதம்

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத்  தரப்பினர் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும்   நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொடிகாமத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழ்ப்பாணம் இந்து கல்லுாரிக்கு அருகில் உள்ள எனது இல்லத்திற்கு  முன்பாக 4 மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாத  9 பேர், முகத்தையும் மோட்டார் சைக்கிளின்  இலக்கத்தகட்டையும் கறுப்பு துணிகளால் மறைத்தவாறு, வாள்களை சுழற்றிக் கொண்டு  செல்வது எனது வீட்டின்  கண்காணிப்பு கெமராவின் மூலம் அவதானிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல குற்றச்செயல்களுக்குப் பின்னால் இராணுவம் கடற்படை, விமானப்படை, பொலிஸார், உளவுப்பிரிவு பின்னணியில் இருப்பது வெளிப்படுத்துகின்றது.

யுத்தகாலத்தில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மோட்டார் சைக்கிளில் கறுப்பு துணிகளை கட்டியவாறு வந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

அதே பாணியில், உள்ளூர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி  இராணுவத்தினரோ, கடற்படையினரோ, விமானப்படையினரோ, பொலிஸாராரோ, அல்லது உளவுப்பிரிவினரோ இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் செய்வதாகவும் குழுக்கள் செய்வதாகவும் காட்டிக்கொண்டு அவர்களை கைது செய்யாமலும் நடவடிக்கை எடுக்கமாலும் விட்டு யாழ்ப்பாணத்தை அச்ச சூழலுக்குள் வைத்திருக்க முற்படுகின்றனர்.

யாழ்ப்பாணம் தற்போது மிகப் பயங்கரமான சுழலில் உள்ளது.  எனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடியமை தொடர்பாக நாளை மறுதினம் சபாநாயகருக்கும் எழுத்து மூலம் அறிவித்து  உரிய தரப்புக்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துவேன்.

இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தயங்கினால் யாழ்ப்பாணம் இன்னமும் மோசமான நிலைக்குச் செல்லும்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரித்துள்ளார்.
 

Leave a comment

Comment