TamilsGuide

வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த  பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸை , இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூவ் பற்றிக் (Andrew Patrick) உள்ளிட்ட குழுவினர் இன்று (26) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, தொழில் வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 1500 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அவர்களை மீள் குடியேற்றுவதற்கான உரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, காணி விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், “உரித்து” செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ள வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் நாட்டிற்கு வருகை தந்து தங்களின் காணி உறுதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு தகைமைகளின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் ஆளுநர் கூறினார். வடக்கு மாகாணத்திற்கான போக்குவரத்து சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும், உள்நாட்டு விமான போக்குவரத்தை முன்னெடுப்பது தொடர்பில் மத்திய அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment