TamilsGuide

நாடு வங்குரோத்து நிலையில் இருந்து இன்னும் மீளவில்லை

நாடு  வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டதாக அரசாங்கம் பொய்யான செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்கி அவர்களை ஏமாற்ற முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 262 ஆவது நிகழ்வு கம்பஹா, பியகம, பமுனுவில மகா வித்தியாலயத்தில் இன்று காலை இடைபெற்றது.

இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார். இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச மேலும் தெரிவித்துள்ளதாவது“ நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டிருந்தால்
சர்வதேச மூலதனச் சந்தைகளில் கடன் பெறும் வாய்ப்பைப் பெறும். ஆனால் இங்கு பொய்யான தகவல்களை அரசாங்கம் வெளியிட்டு வருகின்றது.

எனவே மக்கள் இதனை சரியாக புரிந்து கொள்ளவேண்டும். வரிச்சலுகை வழங்கி நாட்டை கட்டியெழுப்பலாம் என்று அன்றைய ஆட்சியாளர்கள் கூறினர். இதன் விளைவாக எமது நாடு மரணப் பொறியில் சிக்கியது. நாட்டின் பொருளாதாரம் எல்லா வகையிலும் பின்னடைவை சந்தித்து இறுதியில் வங்குரோத்தையடைந்தது.

ஆனால் இன்று பொருளாதார மீட்சி தொடர்பாக அரசாங்கம் பொய்யான செய்திகளை வெளியிடுகின்றது.
மக்களை ஏமாற்றி பொய்களால் முன்னோக்கி நகர்வதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது. பொய்களை கூறி இனியும் முன்னோக்கி செல்ல முடியாது.

உண்மை மற்றும் மீட்சி நிலையை அடிப்படையாகக் கொண்டே நாடு முன்னோக்கி பயணிக்க வேண்டும். யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால், எனக்கு நோய் இல்லை எனக் கூறிக் கொண்டு அதற்கு சிகிச்சை பெறாமல் இருந்தால்,
அது நோயாளியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

அதே போல் இன்றும் எந்த பிரச்சினையும் இல்லை, எல்லாம் சரியாகி விட்டது, வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோம் என்று பொய் சொன்னால் நாடும் மரணத்தையே சந்திக்கும். இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கையில் அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. இறையாண்மை பத்திரதாரர்களுடன் உடன்பாடு இல்லாமல் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோம் என்று எவ்வாறு கூறமுடியும்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a comment

Comment