TamilsGuide

பொருளாதார – தொழிநுட்பத் துறைகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார – தொழிநுட்பத் துறைகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ”DigiEcon’ உலக முதலீட்டு மாநாடு ‘இலங்கையின் இதுவரை பயன்படுத்தப்படாத திறனைப் பயன்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளில் நேற்று கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டலில் ஆரம்பமானது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாம் விரைவான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டுமானால், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் முழு புத்தாக்க கட்டமைப்பு அவசியம்.

அதை சுற்றுலா மற்றும் விவசாய நவீனமயமாக்கல் மூலம் ஆரம்பிக்க முடியும். இத்துறை மற்றொரு வேகமாக வளர்ந்து வரும் துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு மேம்படுத்துவது? எங்கிருந்து அதற்கான பயணத்தை ஆரம்பிப்பது என்ற கேள்விகள் உள்ளன.

அதற்காக முதலில், நமது பொருளாதாரத்தில் இந்தத் துறையை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பதைக் கண்டறிய வேண்டும். டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் புத்தாக்கம் என்பன நமக்கு எவ்வாறு பயனளிக்கும் என்று ஆராய வேண்டும்.

நாம் தற்போது அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகளை அடையாளம் கண்டுள்ளோம். விவசாய நவீனமயமாக்கல் டிஜிட்டல் துறையின் விரிவாக்கத்துடன் கைகோர்த்து செல்லும். டிஜிட்டல் பொருளாதார கேள்வி அதிகரித்துள்ளது.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் எதிர்கால தேவைகளைப் பார்க்க வேண்டியது அவசியம். வன்பொருள் மற்றும் மென்பொருள் துறைகளை உள்ளடக்கிய சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு ஜாம்பவான்களுக்கு இடையே நாம் இருக்கிறோம்.

அந்த அறிவைப் பயன்படுத்தி மேற்படி நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். நமது பல்கலைக்கழகங்களில் இருக்கும் வசதிகளை மேம்படுத்தி அதனை இன்னமும் விரிவுபடுத்தி வருகிறோம்.

பல்கலைக்கழகங்களில் செயற்கை நுண்ணறிவு கற்பித்தலை அறிமுகப்படுத்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் உயர் தொழில்நுட்ப நகரங்களுக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்காக குறைந்தபட்சம் 100 ஏக்கர் அல்லது அதற்கும் அதிகமான பரப்பளவு கொண்ட கொழும்பின் புறநகர் பகுதியில் காணியொன்றை பெறுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.

யாழ்ப்பாணம் போன்ற சிறிய பகுதிகளில் 25 முதல் 50 ஏக்கர் வரையிலான நகரங்களை நிறுவ முடியும்.

ஒரு பாரிய அதிதொழில்நுட்ப நகரம் கொழும்பிலும் மற்றொன்று கண்டியிலும் நிறுவ எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment