TamilsGuide

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மண்டை ஓட்டில் புதிய சாதனம்- டாக்டர்கள் சாதனை

இங்கிலாந்தில் உள்ள சோமட்செட்டில் வசித்து வருபவர் ஜஸ்டின். இவரது மகன் ஓரான் நோல்சன் ( வயது 13). 3 வயதில் இருந்து இவர் தீராத கை,கால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தினமும் தாங்க முடியாத வேதனையை அனுபவித்து வந்தார்.

இதன் காரணமாக அடிக்கடி சுய நினைவு இல்லாமல் சென்று விடுவார். மூச்சு விடவும் சிரமப்பட்டார். எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால் இரவு தூங்கும் போதும் யாராவது ஒருவர் ஓரானை அருகில் இருந்து கண்காணித்தபடி இருக்க வேண்டும். மகன் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததை பார்த்து அவரது தாய் வேதனை அடைந்தார்.

பல இடங்களில் அவருக்கு சிகிச்சை அளித்த போதும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவ மனையில் ஓரான் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் குழுவினர் அறுவை சிசிச்சை செய்து நியூரோ ஸ்டிமுலேட்டர் என்ற வலியை குறைக்கும் புதிய சாதனத்தை பொருத்த முடிவு செய்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் சிறுவன் ஓரானுக்கு டாக்டர் குழுவினர் மிகவும் சவாலான இந்த ஆபரேஷனை மேற்கொண்டனர். இந்த ஆபரஷேன் மூலம் 3.5 சென்டிமீட்டர் சதுரமும், 0.6 செ.மீ. தடிமனும் கொண்ட புதிய சாதனத்தை மண்டை ஓட்டில் பொருத்தினார்கள். சிறுவனின் மண்டை ஓட்டில் உள்ள ஒரு இடைவெளியில் ஒரு எலும்பு அகற்றப்பட்டு இந்த சாதனம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

சுமார் 8 மணி நேரம் இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டது. இந்த சாதனம் மூளையுடன் தொடர்பில் இருந்து வலியை குறைக்கும் வகையில் இயங்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

உலகில் முதல் முறையாக இந்த ஆபரேஷனை செய்து லண்டன் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தற்போது சிறுவன் ஓரான் நன்றாக குணம் அடைந்து வலி குறைந்து மகிழ்ச்சியாக இருந்து வருவதாக அவரது தாய் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது 6 மாதங்களுக்கு முன்பு என் மகனுக்கு இப்படி ஒரு மாற்றம் வரும் என நான் கனவில் கூட நினைக்க வில்லை.

புதிய சாதனம் மூலம் என் மகன் மிக மகிழ்ச்சியாக இருக்கிறான். எல்லோரிடமும் அரட்டை அடித்து வருகிறான். இனிமேல் எங்களுக்கு கவலை இல்லை. அவனது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment