• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கென்யா போராட்டத்தில் பராக் ஓபாமா சகோதரி மீது தாக்குதல்

கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து கோபமுற்ற போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. தீ வைக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

உலகளவில் பேசு பொருளாக மாறி இருக்கும் கென்யா நாடாளுமன்ற போராட்டத்தில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஒன்றுவிட்ட சகோதரி ஔமா ஒபாமா (Auma Obama) கலந்து கொண்டுள்ளார்.

போராட்டம் தொடர்பாக பேசிய அவர், இங்கு என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள், இதனால் தான் இங்கு வந்துள்ளேன். இளம் கென்யர்கள் தங்களது உரிமைக்காக போராடி வருகின்றனர். அவர்கள் கொடிகள் மற்றும் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். என்னால் இப்போது கூட கண் திறந்து பார்க்க முடியவில்லை. எங்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது என்று தெரிவித்தார்.

கென்ய நாடாளுமன்ற போராட்டத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பலத்த காயமுற்றனர். 
 

Leave a Reply