TamilsGuide

தினமும் 10 குழந்தைகளின் கால்கள் துண்டாகிறது - காஸா போரின் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2023 அக்டோபர் மாதம் துவங்கி கடந்த ௯ மதங்களாக நீடித்து வரும் நிலையில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 37, 658 பேர் உயிரிழந்துள்ளனர். காஸா நகரம் போரினால் முற்றிலும் உருகுலைந்துள்ள நிலையில் தற்போது ராஃபா நகரின் மீது தனது கண்களை இஸ்ரேல் திருப்பியுள்ளது.

அகதி முகாம்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் சர்வதேச சமுதாயத்தின் கடும் எதிர்ப்புக்கு இஸ்ரேல் ஆளாகியுள்ளது. போரை நிறுத்துவதற்கான முயற்சியில் ஐ.நா மெனக்கிட்டு வந்தாலும் இஸ்ரேல் பிடி கொடுப்பதாக தெரியவில்லை.

எல்லைகளை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளதால் காஸா மற்றும் ராஃபா நகரத்தில் தாக்குதல்களால் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும் நிவாரணப் பொருட்களும் கிடைக்காத சூழல் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 101 பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஐநாவின் பாலஸ்தீன நிவாரண பிரிவான UNRWA தலைவர் பிலிப் லசாரினி அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளார. அதாவது, காஸாவில் சராசரியாக தினமும் 10 குழந்தைகள் தங்களது ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 10 குழந்தைகள் எனில் 260 நாட்களாக நடந்து வரும் இந்த போரில் காஸாவில் சுமார் 2,000 குழந்தைகள் தங்களின் கால்களை இழந்துள்ளனர் .

மேலும் தாக்குதலால் படுகாயமடைந்த குழந்தைகளின் கால்களை அகற்றும்போது சில சமயங்களில் மயக்க மருந்து கூட செலுத்துவதற்கு இல்லாத சூழ்நிலை இருப்பதாக பிலிப் லசாரினி தெரிவிக்கிறார். இந்த மொத்த போரிலும் இதுவரை சுமார் 21,000 குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment