TamilsGuide

இந்தியன் 2 - யாரும் பார்க்காத நடிகராக கமல்ஹாசனை பார்ப்பீங்க - இயக்குநர் சங்கர்

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது.

இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில், இந்தியன் 2 படக்குழு கலந்து கொண்டது. அதில் பேசிய இயக்குநர் சங்கர், இன்றைய சூழலில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்தியன் 2. இந்தியன் 1 கதை தமிழகத்திற்குள் நடப்பது போன்ற சம்பவங்களை கொண்டிருந்தது. இந்தியன் 2 தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்களில் நடக்கும் சம்பவங்கள் பற்றியும் பேசுகிறது. இந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கு.

இந்த படம் உங்கள் ஒவ்வொருத்தரையும் யோசிக்க வைக்கும் என்று நம்புகிறேன். இந்த படம் சிறப்பாக வருவதற்கு முதல் காரணம் கமல்ஹாசன் தான். முதல் பாகத்தில் கூட 40 நாட்கள் தான் சிறப்பு வேடம் போட்டு கமல் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு தினமும் சிறப்பு வேடம் போட வேண்டி இருந்தது.

மேக்கப் காரணமாக படப்பிடிப்பு துவங்கும் முன்பே வந்து, படப்பிடிப்பு முடிந்தும் எல்லோரும் புறப்பட்ட பிறகே கமல்ஹாசன் புறப்பட்டு சென்றார். அவரது மேக்கப்-ஐ போடுவதற்கும், அழிப்பதற்கும் 1 மணி நேரம் ஆகிவிடும். முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல்ஹாசனை முதல்முறை பார்த்த போது ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. அதே சிலிர்ப்பு 25 ஆண்டுகள் கழித்தும் அப்படியே இருக்கு.

முதல் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தாவின் மேக்கப் கமல்ஹாசனின் நடிப்பை முழுமையாக பார்க்க விடாமல் செய்தது. இந்தமுறை மேக்கப் சார்ந்த நுட்பங்கள் வளர்ச்சி அடைந்திருப்பதால், மிகவும் மெல்லிய செயற்கை சருமம் மேக்கப் ஆக போட்டிருக்கிறோம். இதனால், கமல்ஹாசனின் நடிப்பை கடந்த பாகத்தில் இருந்ததை விட இந்த பகாத்தில் அதிகளவில் பாரக்க முடியும்.

கமல்ஹாசனுக்கு எந்த மாதிரி சவால் கொடுத்தாலும், அவர் அதை சிறப்பாக செய்கிறார். அவர் நடிக்கும் காட்சியை படமாக்கும் போது ஒவ்வொரு காட்சியிலும் பிரமிப்பா இருந்தது. நான் எதிர்பார்த்ததை விட சிறப்பான இசையை அனிருத் கொடுத்திருக்கிறார். அவருக்கு என்னோட நன்றி. படத்தில் ஒவ்வொரு டியூனும் 100 சதவீதம் ஓ.கே. சொல்லும்வரை திரும்ப திரும்ப செய்து கொடுத்தார். படத்தில் நடிகர் விவேக் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், என்று தெரிவித்தார். 
 

Leave a comment

Comment