TamilsGuide

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் - யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவா் போட்டி

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் இளவாலையை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் (Chrishni Reshekaron) பிரித்தானியாவின் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

கடந்த 20 வருடமாக சட்டன் (Sutton) பகுதியில் வசித்துவரும் கிருஷ்ணி ரிஷிகரன் சட்டன் மற்றும் செம் (Sutton and Cheam) ஆகியவற்றிற்கான நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுகிறார்.

சட்டன் மற்றும் செம் ஆகியவை தனது சிறுவயது வாழ்விடமாக இருந்ததாக கூறும் அவர், தான் புனித.பிலோமினா பாடசாலையில் கல்வி கற்றதையும் இந்தச் சமுதாயத்தில் வளர்ந்து வந்ததையும் நினைவுகளாக மீட்டுப் பார்ப்பதாக கூறுகிறார்.

ஒரு குடும்பமாக தாம் பல போராட்டங்களை எதிர்கொண்டாலும், இங்குள்ள சமூகத்தின் ஆதரவே தான் இன்று இந்த நிலைக்கு வர உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.

சட்டத் தொழிலைத் தொடர்ந்து, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றும் பிரித்தானியாவின் முன்னணித் தொண்டு நிறுவனத்தில் இப்போது பணிபுரியும் கிருஷ்ணி ரிஷிகரன் கவுன்சிலராக இருந்து, மக்கள் எதிர்நோக்கும் வீட்டுப் பிரச்சனைகள் தொடர்பிலும் கவனஞ் செலுத்துகிறார்.

தாராளவாத சனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்த பழமைவாத அரசாங்கமானது கடந்த 14 ஆண்டுகாலத்தில் பிரித்தானியாவை பலவீனப்படுத்தியுள்ளதாக அவர் கூட்டிக் காட்டியுள்ளார்.

சட்டன் மற்றும் செம் (Sutton and Cheam) ஆகிய இடங்களில் வசிக்கும் பலருடன் தான் பேசி வருவதாக தெரிவித்த அவர், வாடகை, வீட்டிற்கான கட்டுத்தொகை, மற்றும் சேவைகளிற்கான கட்டணங்கள் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து அவர்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளார்கள் என கூறியுள்ளார்.

அதிகரிக்கும் குற்றச் செயல்கள், தேசிய சுகாதார சேவைக்கான காத்திருப்புப் பட்டியல், வீட்டுப் பிரச்சினைகள், தெருக்கள் மற்றும் பசுமையான இடங்கள் குறித்த சிக்கல்கள் என எமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கச் செய்வன குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

சட்டன் மற்றும் செம் (Sutton and Cheam) ஆகியன சிறப்புற இருக்கும் தகுதிவாய்ந்தவை. பிரிட்டனின் எதிர்காலத்திற்கான ஒரு திட்டத்தைத் தொழிற்கட்சி கொண்டுள்ளது. அத்துடன் பிரிட்டனின் குடியிருப்பாளர்களுக்கு மிகவும் தேவையான மாற்றத்தையும் அது வழங்கும். சட்டன் மற்றும் செம் (Sutton and Cheam) ஆகிய இடங்களில் தொழிற்கட்சி வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக இந்தப் பொதுத் தேர்தல் அமைகின்றது.

அரசியல் என்பது பொதுச் சேவையாக இருக்க வேண்டும் என தான் நம்புவதாக கூறுகின்ற அவர், அனைத்து குடும்பங்களுக்கும் சேவை செய்வதும், பிரித்தானிய சமூகத்துக்கு பக்கபலமாக இருப்பதும் தனக்குரிய மேன்மையான செயல்கள் எனவும் கிருஷ்ணி ரிஷிகரன் (Chrishni Reshekaron) வலியுறுத்தி உள்ளார்.
 

Leave a comment

Comment