TamilsGuide

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் ஒழிக்கப்படும்-பொலிஸ்மா அதிபர்

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களை முற்றாக ஒழிப்பதாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல சுஹ_ருபாய கட்டிடத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2023 டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக   அவர் தெரிவித்தார்.

இந்த செயற்பாட்டின் மூலம், இது வரையில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என 138,116 பேரும், பட்டியலிடப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த 965 உறுப்பினர்களுள் 703 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினரின் ஒத்துழைப்புடன் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காக, இலங்கைப் பொலிஸார் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் சிலரைத் தவிர இந்நாட்டின் பெரும்பாலான பொது மக்கள் இலங்கை பொலிஸார் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Comment