TamilsGuide

முழு வேகத்துடன் வருகிறான் டர்போ ஜோஸ் - டிரைலர் அப்டேட்

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்மூட்டி. 1983 ஆம் ஆண்டு வெளியான 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 'மௌனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

ராம் இயக்கத்தில் மம்மூட்டி மற்றும் அஞ்சலி இணைந்து 2018 ஆம் ஆண்டு வெளியான 'பேரன்பு' படத்தில் நடித்தனர். கடந்த ஆண்டு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்குவாட் மற்றும் சில மாதங்களுக்கு முன் பிரம்மயுகம் போன்ற வித்தியாசமான கதைக்களமுடைய படங்களைத் தேடி நடித்து வருகிறார். பிரம்மயுகம் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

அதைத் தொடர்ந்து அடுத்ததாக 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார். மமூட்டி மற்றும் கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வைசாக் இதற்கு முன் மோஹன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். படத்தின் கதையை மிதுன் மானுவேல் தாமஸ் எழுதியுள்ளார் இதற்கு முன் பிரபல மலையாள திரைப்படமான அஞ்சாம் பதிரா மற்றும் ஆப்ரஹம் ஓஸ்லர் படங்களுக்கு கதையை எழுதியது குறிப்பிடத்தக்கது. சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர்,சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வரும் மே 23 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. பீஷ்ம பர்வம் படத்திற்கு பிறகு மமூட்டி ஒரு மாஸ் ஹீரோவாக நடித்து இருக்கிறார். கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி வில்லனாக இப்படத்தில் நடித்துள்ளார்.

டிரைலரின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
 

Leave a comment

Comment