TamilsGuide

மதுபான உரிமங்கள் வழங்குவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் - சஜித் கோரிக்கை

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிமைப் பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கத்தினால் வழங்கப்படும் மதுபான உரிமங்கள் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சட்டத்தின் மூலம் தடை செய்யப்படும்.

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் ஆசிர்வாதத்துடன் ஆட்சிக்கு வந்தால் இது கட்டாயம் நிறுத்தப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த உரிமங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும். இது தொடர்பாக நீதிமன்றங்களை நாடினால், பாராளுமன்ற சட்டத்தின் மூலமாக இந்த உரிமங்களை தடை செய்வோம்.

இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய பிரதேச செயலகத்தின், வெலங்கஹவல சந்தியில் மதுபான அனுமதிப்பத்திரத்துடன் கூடிய உணவகம் தொடர்பில் தான் இதற்கு முன்னர் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

இது குறித்து மீண்டும் கேள்வி எழுப்புவது குறித்து கவலை தெரிவிக்கிறேன். மகா சங்கத்தினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் மீண்டும் இது மீள திறக்கப்பட்டுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment