Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

மாற்று சக்திக்கான தேவை உணரப்படுகிறதா

Wednesday 13th Sep 2017 17:33 PM

கருணாகரன்

 

“தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீதும் அதனுடைய தலைமையின் மீதும் கடுமையான விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. வரவர இந்த விமர்சனங்களின் அளவும் சூடும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் இனிவரும் தேர்தல்களில் கூட்டமைப்பிற்கு வீழ்ச்சியேற்படும் என்றே தெரிகிறது. ஆனால், சனங்கள் நம்பிக்கை கொள்ளக்கூடிய அளவுக்கு இன்னொரு அரசியல் சக்தி எழுச்சியடையவில்லை என்பதால் கூட்டமைப்புக்குச் சற்று ஆறுதல் உண்டு. மற்றப்படி அது உள் முரண்பாடுகளாலும் வினைத்திறனின்மையாலும் சீரழிந்து விட்டது. இனியும் அது தன்னை ஒழுங்கமைத்து மக்களுக்கான ஒரு அரசியற் சக்தியாகச் செயற்படும் என்று நான் நம்பவில்லை. உங்களுடைய கருத்து என்ன?” என்று மின்னஞ்சலில் கேட்டு எழுதியிருந்தார் ஒருவர்.

“ஏறக்குறைய உங்களுடைய இந்தக் கருத்துடன் நான் உடன்படுகிறேன். ஆனால், ஒரு விடயத்தில் அல்ல. இன்னொரு அரசியல் சக்தி எழுச்சியடையவில்லை என்று நீங்கள் குறிப்பிடுவதில் எனக்கு மாற்று அபிப்பிராயம் உண்டு” என்று அவருக்குப் பதில் அளித்தேன்.

“அப்படியென்றால், அந்தச் சக்தி எது?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார் அந்த நபர்.

இதற்கு என்ன பதிலைக் கொடுத்திருப்பேன் என்பதே உங்களுடைய எதிர்பார்ப்பு. நிச்சயமாக இதற்குப் பதில் உண்டு. அதைக்குறித்தே இந்தப் பத்தி பேச முற்படுகிறது.

தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மிகப் பலவீனமான நிலையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. கூட்டமைப்பிலுள்ளோருக்கும் அதனுடைய தீவிர ஆதரவாளர்களுக்கும் கூட இது தெளிவாகத் தெரியும். ஆனால் கூட்டமைப்பை விட்டால் வேறு சக்தி – மாற்றுத் தரப்பு உண்டா? அப்படியென்றால், அது என்ன? அதனுடைய அரசியல் வழிமுறை என்ன? என்பதே இன்றைய பொதுக் கேள்வி.

இந்தக் கேள்விக்கான பதிலைச் சரியாகக் காணாதவரைக்கும் கூட்டமைப்பு பலமாகவே இருக்கும். அரசியல் ரீதியாக அது முன்னகர்வுகளை மேற்கொள்ளாது விட்டாலும் அதிகாரத்தில் இருந்தே தீரும். தவிர்க்க முடியாமல் மக்கள் அதனை அடுத்த தேர்தல்களிலும் தெரிவு செய்தே தீருவர். ஆனால் மக்களுடைய அரசியல் பிரச்சினையும் தீராது. வாழ்க்கைப் பிரச்சினையும் தீராது. இதுதான் இன்றைய யதார்த்தம்.
 

ஆனால், இதை மறுத்துரைப்போரும் உண்டு. அவர்களுடைய வாதத்தின்படி, “கூட்டமைப்பை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தும் பணியிலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வேலைகளிலும் தமிழ் மக்கள் பேரவை தீவிரமாகச் செயற்படுகிறது. ஏறக்குறைய அது அந்த வேலையில் முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. கூட்டமைப்பிலுள்ள முதலமைச்சர் விக்கினேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் போன்ற கட்சிகள் மற்றும் அனந்தி சசிதரன் போன்ற உறுப்பினர்களையெல்லாம் பேரவை தன்னுடைய பக்கமாக ஈர்த்துள்ளது. சமவேளையில் கூட்டமைப்புக்குள்ளே மோதல்களையும் உள் நெருக்கடிகளையும் இடைவெளியையும் அது உருவாக்கியுள்ளது. ஆகவே இது நிச்சயமாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு வாய்ப்பாக இருக்கும். கூட்டமைப்பின் பலவீனத்தைப் பயன்படுத்தி, வெளிப்படையாகப் பேசத் தயங்கும் கூட்டமைப்பின் தடுமாற்றங்களைத் தன்னுடைய அரசியல் முதலீடாக்கித் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எழுச்சியடையும். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் நிலைப்பாடு தெளிவானது. அதை மிக வெளிப்படையாக, உரத்த குரலில் அதனுடைய தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறி வருகிறார். ஆகவே கூட்டமைப்புக்கு மாற்றான சக்தியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளது” என்பதாகும்.

ஆனால், இதை நான் மறுத்துரைக்கிறேன். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்திருக்கின்ற அரசியல் நிலைப்பாடு ஒன்றும் புதியதல்ல. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் குரலும் புதியதல்ல. பலரும் ஏறி விழுந்த குதிரையே அது. அதற்கும் அப்பால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை எட்டுவதற்கான வழிமுறைகள் எவையும் புதியவையும் துலக்கமானவையும் அல்ல. சர்வதேச சமூகத்தை நம்பியிருத்தலே இதனுடைய ஆதார விதி. சர்வதேச சமூகம் ஒரு போதுமே கொழும்பையும் அரசாங்கத்தையும் சிங்களத் தரப்பையும் விட்டு விட்டு முற்று முழுதாகத் தமிழர்களின் பக்கமாக வரப்போவதில்லை. வேண்டுமானால், தேவையேற்படும்போது, தேவைக்கேற்ற விதத்தில் தமிழர்களைத் தனக்குரியவாறு பயன்படுத்திக் கொள்ளும். இப்போது நடந்து கொண்டிருப்பதும் இதுதான். முன்பு நடந்ததும் இதுதான். இனி நடக்கப்போவதும் இதுவே. “இந்தா பாருங்கள், உங்களுக்காகவே நாங்கள்” என்று காட்டப்பட்ட பந்தாக்களெல்லாம் வெறும் புஸ்வாணமாகியதே அனுபவம்.

ஆனால், “இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தமிழர்கள் நுட்பமாகச் சிந்தித்துச்  செயற்பட்டுத் தங்களுடைய நலனையும் அதற்குள் பெற்றுக்கொள்ள முடியுமல்லவா?” என்று கேட்போரும் உள்ளனர். “தமிழர்களின் இன்றைய அரசியல் பலம் என்பது புலம்பெயர் நாடுகளிலும் சில அனுகூலங்களைக் கொண்டுள்ளதால், சர்வதேச ஆதரவைத் திரட்டுவதிலும் அதைப் பலமாக்குவதிலும் வாய்ப்புகளைத் தருமே. எதற்காக எதிர்மறையாகச் சிந்திக்க வேணும்?” எனவும் இவர்கள் வாதிடுகின்றனர்.

இதற்கு ஒரு புன்சிரிப்பையே பதிலாகத் தர முடியும். இப்படித்தான் கடந்த தசாப்தங்களில் “தொப்புள்கொடி உறவு“ என்று சொல்லி நாம் தமிழ்நாட்டின் ஆதரவைப் பெரிதாக நம்பியிருந்தோம். இந்தியாவையே நம்பியிருந்த காலமும் இருந்தது. ஆனால், இந்த நம்பிக்கைக்கு என்ன நடந்தது என்பது வரலாற்று அனுபவங்களாகும். பிறகு மேற்குலகத்தை நம்பியிருந்த காலமும் ஒன்றிருந்தது. அதற்கு என்ன நடந்தது என்பதை முள்ளிவாய்க்கால் அனுபவங்களும் போருக்குப் பிந்திய பாடங்களும் தற்போதையை நல்லாட்சியில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் சொல்லும். இதைப்போலவே இனியும் சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைக்கும் என்று கூறுவதும் நம்புவதும் அமையும். உலகம் எப்போதும் வர்க்க நிலைப்பட்டே சிந்திக்கிறது, செயற்படுகிறது. அது ஆதிக்கத் தரப்புகளோடுதான் கூட்டுக்களையும் பேரங்களையும் வைத்துக் கொள்ளும். இது ஆளும் தரப்புகளின் அரசியல் விதி. எனவேதான் உலகமெங்கும் நீதிக்கான குரல்களும் நியாயத்தைக் கோரும் மக்களும் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டேயிருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் “சர்வதேசத்தை நம்பியிருத்தல் – வெளியாரை நம்பியிருத்தல்” என்ற அரசியல் நிலைப்பாடானது மாயப்பால் குடிப்பதாகவே போய் முடியும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்நாட்டில் எந்த அரசியல் சக்திகளையும் நம்பவில்லை. முக்கியமாக சிங்கள, முஸ்லிம் தரப்புடன் அதற்கு இணக்கங்களே இல்லை. அவற்றோடு இணைந்து வேலை செய்வதற்கான வேலைத்திட்டமும் நம்பிக்கையும் மனப்பாங்கும் அதனிடம் இல்லை. ஆகவே முற்றுமுழுதாக “எல்லாப் பிரச்சினைகளுக்கும் சர்வதேச நீதியைக் கோருதல்” என்பதே அதனுடைய அரசியல் ஆதாரமாக உள்ளது. இது ஒரு பொய்க்குதிரையோட்டமே.

ஆனால், வெளித்தோற்றத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது தன்னுடைய நிலைப்பாட்டிலும் கோரிக்கையிலும் விடாப்பிடியாகவும் உறுதியாகவும் இருக்கிறது. இது அரசியல் நேர்மை என்று காட்டப்படுகிறது. இருக்கலாம். ஆனால், இதெல்லாம் அரசியல் வெற்றியைத் தரக்கூடியவை அல்ல. வேண்டுமானால் ஒரு அடையாளத்தை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் கொடுக்கலாம். இப்படித் தமக்கென்ற அடையாளத்தைக் கொண்டிருக்கும் அரசியற் சக்திகளும் கட்சிகளும் உலகெங்கும் தாராளமாக உள்ளன. இடதுசாரிய அமைப்புகள் தொடக்கம் ஏராளமான கட்சிகளையும் அமைப்புகளையும் இங்கே பட்டியல்படுத்த முடியும். ஆனால், அவற்றினால் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடிந்ததில்லை. தமது நிலைப்பாடுகளுக்கும் கோட்பாட்டுக்கும் செயல் வடிவம் கொடுக்க முடிவதில்லை. சிலவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தேர்தலில் வெற்றியடையவும் கூடும். அப்படி வென்றாலும் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றோ, மக்கள் வெற்றியடைவார்கள் என்றோ கூற முடியாது. அவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இன்னொரு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப்போல அரசியல் ரீதியாக நகர முடியாமல், மக்களால் நிராகரிக்கப்படும் நிலையே பின்னர் ஏற்படும்.

ஏனென்றால் தமது நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு அல்லது இதை வெற்றியடைய வைப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் எத்தகைய செயற்றிட்டமும் அர்ப்பணிப்பும் கிடையாது. இதுவே அதனுடைய பலவீனம். இதையே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தனக்கான வாய்ப்பாகக் கொண்டிருக்கிறது.

தவிர, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னுடைய அரசியல் செயற்பாட்டை மக்களிடம் விரிவாக்கவும் இல்லை. ஆனால், அதற்கான வாய்ப்புகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குத் தாரளமாக இருந்தன. குறிப்பாகப் போருக்குப் பிந்திய சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான களப்பணிகளைச் செய்வதற்கு அதற்குப் போதிய அவகாசமும் வாய்ப்பும் இருந்தது. ஆனால், அது அதைச் செய்யவில்லை. படைவிலக்கல், காணி மீட்பு, அரசியற் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் என்ற சில பொதுப் போராட்டங்களில் ஈடுபட்டதுண்டு. ஆனால், இவற்றைச் சரியாக முன்னெடுத்துப் பெரு வெற்றியாக்க முடியவில்லை. அத்துடன் இந்தப் போராட்டங்களின் தொடர்ச்சியில் அது காணாமல் போய் விட்டது. இது மட்டுமல்ல, கிராமங்களையும் அடிமட்ட மக்களையும் அது சென்றடையவில்லை. இதனால்தான் அது கடந்த தேர்தலிலும் வெற்றியைப் பெற முடியாமல் போனது.

இவ்வளவுக்கும் புலம்பெயர் சமூகத்தினரில் கணிசமான தொகையினர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளித்து உதவி வந்திருக்கிறார்கள். கடந்த தேர்தல்களின் போதும் பிற சந்தர்ப்பங்களிலும் புலம்பெயர் மக்களுடைய ஆதரவும் நிதிப்பங்களிப்பும் அதற்குக் கணிசமானளவு இருந்தது. இன்னும் அந்த ஆதரவுண்டு. இதைவிட அதனுடைய தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்பட ஏனைய அடுத்த நிலைக்குரிய தலைவர்கள் எல்லாம் பல நாடுகளுக்கான பயணங்களையும் மேற்கொண்டிருக்கின்றனர். இப்படியான அனுகூலங்களைக் கொண்டிருந்த சக்தி தன்னை மக்கள் மயப்பட்ட அரசியற் சக்தியாக வளர்த்தெடுக்கத் தவறி விட்டது. ஆகவே கூட்டமைப்புக்கு மாற்றான அரசியற் சக்தியாக இதுவரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உருவாகவில்லை. இப்போதுள்ளது வெறும் தோற்றமாயையே!

“அப்படியென்றால், அடுத்தது என்ன?” என்ற கேள்வியை நீங்கள் எழுப்பலாம்? நிச்சயமாக.

மிஞ்சியிருப்பவை, டக்ளஸ் தேவானந்தாவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் அமைப்பு, முருகேசு சந்திரகுமாரின் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவையே. இவற்றில் எதை மாற்றுச் சக்தியாக அல்லது கூட்டமைப்புக்கு நிகரான தரப்பாக அடையாளம் காணமுடியும்?

இவை எவையும் இன்னும் வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்களிடம் பேராதரவைப் பெறக்கூடிய அளவுக்கான அடையாளத்தைக் கொள்ளவில்லை என்பது உண்மையே. சில கட்சிகள் பிராந்திய எல்லைக்குள் மட்டுப்பட்டவை. உதாரணம், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கிழக்கிற்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது. இதைப்போல சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு வடக்கிற்குள்ளேயே செயற்படுகிறது. ஈ.பி.டி.பியும் இன்றைய நிலையில் அப்படித்தான். வடக்கிற்குள் மட்டுமே அது மட்டுப்பட்டுள்ளது. இப்படியே எந்தச் சக்தியும் வடக்குக் கிழக்குத் தழுவியதாக பேரறிமுகத்தைப் பெற்றதாக இல்லை.  இதற்கான அக புறக்காரணங்களும் உண்டு. தமிழ் ஊடகவெளியும் பெருந்திரள் மனப்பாங்கும் இவ்வாறான பிற சக்திகளை அடையாளம் காணவோ காட்டவோ வளர்த்தெடுக்கவோ முற்படுவதில்லை. இதனால் ஏற்பட்டதே இந்தத் தேக்க நிலையாகும் – வெற்றிடமாகும். இன்று தமிழ் அரசியலில் ஏற்பட்டுள்ள தேக்கத்துக்கும் தடுமாற்றத்துக்கும் வரட்சிக்கும் காரணம் இதுவே.

ஆனால், தமிழ்ச்சமூகம் ஒரு போதுமே ஒற்றைப்படைத் தன்மையாக இருந்ததில்லை. அது எப்போதும் பன்முகத்தன்மையோடும் பல தெரிவுகளோடும் மாற்று அரசியலுக்கான இடங்களை அளிக்கும் தன்மையோடுமே இருந்திருக்கிறது. இன்னும் அப்படியான ஒரு நிலை தமிழ்ச்சமூகத்திடம் உண்டு. எத்தகைய சூழலிலும் 25 தொடக்கம் 30 வீதமான மக்கள் பெருந்திரள் அரசியலுக்கு மாற்றான நிலைப்பாட்டுடனும் தெரிவுகளுடனுமே இருந்துள்ளனர். சிலவேளைகளில் இந்த வீதம் அதிகரித்திருந்ததும் உண்டு. பெரும் செல்வாக்கோடிருந்த தமிழரசுக் கட்சியும் அதனுடைய தலைவர்களும் 1970 களில்  தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்க்காங்கிரசும் அவ்வாறு தோற்கடிக்கப்பட்டது. பதிலாக இடது சாரிகளும் பிற அரசியற் சக்திகளும் வெற்றியடைந்துள்ளமை வரலாறு. தற்போது கூட கூட்டமைப்புக்கு வெளியே பிற சக்திகளான ஈ.பி.டி.பி, ஐ.தே.க போன்ற சக்திகளையும் மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். 1970 கள், 1980 களில் இந்தப் பன்முக முனைப்பு உச்சமடைந்திருந்தது. இதனால்தான் தமிழ்ச்சமூகத்திலிருந்து 30 க்கு மேற்பட்ட இயக்கங்கள் உருவாக முடிந்தது. இது மாற்று அரசியல் – புதிய அரசியல் தெரிவின் முனைப்பின் விளைவுகளே. ஆனால், இதைத் தமிழ்ச்சமூகத்தின் மேலாதிக்கச் சிந்தனை எப்போதும் இல்லாதொழிக்கவே முற்பட்டது. இதற்காக அது பன்முகத்தன்மைக்கும் ஜனநாயகத்துக்கும் எதிராகப் புனிதவுருக்களைக்கட்டமைத்து, ஏனைய சக்திகளை எதிர்ச்சக்திகளாக – துரோகிகளாகச் சித்திரித்துக் களத்திலிருந்து அகற்ற முனைந்தது. அப்படியே அது தன்னைத் தற்கொலை அரசியலுக்குக் கொண்டு சென்றது. இப்போதும் இதுவே நிலைமை. இதனால்தான் புதிதாக ஒரு மாற்றுச் சக்தி உருத்திரளமுடியாதவாறுள்ளது.

ஆனால், சமூகத்தில் மாற்றுத் திரட்சிக்கான நற்கூறுகள் தாராளமாகவே உண்டு. எந்தச் சமூகத்திலும் இவ்வாறான இயல்பிருப்பதுண்டு. அதை ஒருங்கிணைப்பதே அந்தச் சமூகத்தின் வெற்றியாகும். ஒரு சமூகத்தையோ ஒரு இனத்தையோ அதனுடைய நெருக்கடிகளிலிருந்து மீட்பது மாற்றுச் சக்திகளும் மாற்று அரசியலுமே. இதுவே இன்றைய தேவை. காலம் அதை நிச்சயமாகச் செய்தே தீரும். இப்போது அதற்கான சமூக முனைப்பும் மக்கள் மனநிலையும் உள்ளது. எழுபதுகளில் எவ்வாறு ஒரு பெருவெடிப்பாக இயக்கங்கள் புதிய அரசியற்போக்கை முன்னெடுப்பதற்காக உருவாகினவோ, அத்தகைய ஒரு சூழலே தற்போதுள்ளது. ஆனால், அது ஆயுதப்போராட்டமாக அல்ல. அந்தப் படிப்பினைகளிலிருந்து கற்றுக்கொண்டு எதிர்கால அரசியலை - மக்களுக்கான முன்னெடுப்பதற்கான புதிய அரசியற் செயற்பாட்டியக்கமாக. காலத்தின் விதிப்படியே இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அம்பலமாகியுள்ளது. அதனுடைய செல்வாக்கு மண்டலத்தில் ஏற்பட்ட வெடிப்பு, புதிய தரப்புக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் புதிய தரப்பு நிச்சயமாக தற்போதுள்ள தேக்க நிலை அரசியலை உடைக்கும். அது யதார்த்தத்தையும் உண்மையையும் சரிவிகிதத்தில் கலந்து தன்னுடைய அரசியலை முன்னெடுக்கும்.

ஆகவே, புதிய அரசியற் சக்தி மெல்லக் கருக்கொண்டுள்ளது. இப்போது அது உங்கள் கண்ணுக்குப் புலப்படாது. ஆனால், அந்தச் சக்தி தன்னியல்பில் வளரும். அதற்கான களச்சூழலும் காலச்சூழலும் உருவாகியுள்ளது. அதற்கான உரையாடல்களும் செயல் முனைப்புகளும் நடந்து கொண்டிருக்கின்றன. யாருமே எதிர்பாராத விதத்தில்தான் மாற்றத்திற்கான சக்திகள் உலகெங்கும் மேலெழுந்திருக்கின்றன. அப்படியான ஒரு தருணம் இங்கும் கனிந்து கொண்டிருக்கிறது. நிகர்ச்சக்தி முளைவிட்டுக்கொண்டிருக்கிறது. எப்படி எதிர்பாராத விதமாக ஒரு வரலாற்றுத் தேவைக்காக சந்திரிகா குமாரதுங்க அரசியலுக்கு 1990 களில் முன்னிலைப்படுத்தப்பட்டாரோ, எப்படி எதிர்பாராதவிதமாக ஐ.தே.கவும் சு.கவும் (மைத்திரியும் ரணிலும்) 2008 இல் கூட்டுச்சேர வேண்டியிருந்ததோ அப்படி ஒரு கூட்டோ புதிய திரட்சியோ ஏற்படும். வரலாறு வெற்றிடங்களையும் பலவீனமான நிலையையும் தொடர்ந்தும் அனுமதித்திருப்பதில்லை.

ஆகவே மாற்றுச் சக்தி உங்கள் கைகளில்தான் உள்ளது. வெண்ணெய் உங்களிடமே.