Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மண்ணின் மைந்தர்கள்

உயிரில் இருந்து ஆத்மாவிற்கு ஒரு மடல்

Wednesday 13th Sep 2017 21:09 PM

நேரு

 

அப்பா... எவ்வளவு அன்பு அதில் கலந்திருக்கிறது... கந்தையா குணரத்தினம் என் தந்தையார் நீங்கள் மரணித்து இன்றுடன் 17 ஆண்டுகள்... எல்லாம் நேற்றுப் போல் இருக்கிறது தந்தையே.... என் வாழ்வும் வளமும் என்றும் என்னுடன் நீக்கமற நிறைந்திருக்கும் நீங்களே என்பேன்.... தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள்... நான் உங்களிடம் கற்ற மந்திரங்களை என்னை வளர்தெடுத்த தடங்களை ஒருமுறை திரும்பிப் பார்க்கிறேன்....

உடுப்பிட்டி அ.மி கல்லூரியில் முதலாம் வகுப்பு... அன்று ஒரு பாடத்திற்கு ஆசிரியர் வரவில்லை... பக்கத்து இரண்டாம் வகுப்பில் கணக்கு வாத்தியாயர் கரும்பலகையில் எழுதிய கணக்குகளுக்கு அவர் மாணவர்களுக்கு முந்தி நான் விடை எழுதிக் கொண்டு சென்று காட்ட அவர் எனனை அழைத்து இரண்டாம் வகுப்பில் இருத்த நான் பெரும் சந்தோசத்துடன் வந்து என் வகுப்பேற்றத்தை சொல்ல மறுநாள் பாடசாலை வந்து என்னை முதலாம் வகுப்பிற்கு மீண்டும் மாற்றிவிட்டு வந்த உங்கள் மீது எனக்கு சற்று காலம் டூ தான்... என் சகோதரிக்கும் இதையே தான் செய்தீர்களாம்... ஒரு தலைமுறை கழிந்து 30 ஆண்டுகளின் பின் உங்கள் பேரப்பிள்ளை விடயத்திலும் இதையே தான் வலியுறுத்தினீர்களாம்... ஒரு பிள்ளை வாழ்க்கையின் வசந்தங்கள் அனைத்தையும் சரிவர அனுபவித்துச் முன்னேற வேண்டும்.... பெற்றோர் தம் அற்ப சந்தோசங்களுக்காக பிள்ளைகளின் படிமாண வளர்ச்சியையும் வாழ்க்கை அனுபவங்களையும் அழித்துவிடக்கூடாது.... இன்றும் என் கண்ணெதிரேயே பலர் விடும் தவறாக இதனை நான் கண்டு வருகின்றேன்....
சிறு வயது முதலே வாசிக்கும் பழக்கத்தை நீஙகள் என்னுள் வளர்த்து விட்டதும்.... அதற்காக புத்தகங்கள் பத்திரிகைகள் சஞசிகைகள் என நீங்கள் வாங்கிக் குவிப்பதும்.... ஆப்புலிமாமாவில் தொடங்கிய என் வாசிப்பு வுiஅநஇ சுநனநச'ள னுபைநளவஇ ளுpழசவள ளுவயச என வளர்ந்ததும் இன்றும் தொடரும் என் வாசிப்பின் அடித்தளம்... வாசிப்பின் துணைகொண்டு எனது 13 வயதில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் விளையாட்டரங்கு நிகழ்ச்சியில் முதலில் விமர்சன ஆய்வுகளை எழுதிய நான் பின்னர் ஒலிம்பிக்கின் வரலாறு என தொடர் ஆய்வுக்கட்டுரைகளை எழுத ஆரம்பித்ததும்... அதனால் உந்தப்பட்டு அதே வயதில் மூன்று பள்ளித் தோழர்களை இணைத்து இளந்தளிர் என்னும் 40 பக்க கையெழுத்து சஞ்சிகையை அம்புலிமாமா வடிவத்திலும் வுiஅந தரத்திலும் வெளியிட்டதும்.... அன்று உங்களால் ஊக்கமும் ஆக்கமும் தந்து வளர்க்கப்பட்ட என் ஊடகப்பணி இன்று 40 ஆண்டுகளை பூர்த்தி செய்து இன்னும் வீரியத்துடனேயே பயணிக்கிறது தந்தையே...

76ஆம் ஆண்டு... தியாகி பொன் சிவகுமாரனின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் அண்ணைமார் வந்து அன்று பாடசாலையை புறக்கணிக்கச் சொல்ல என் வகுப்பின் மாணவத்தலைவன் என்ற வகையில் என் வகுப்பு தோழர்களை ஒவ்வொருவராக பாடசாலையில் இருந்து திருப்பி அனுப்பிவிட்டு நானும் வீடு திரும்பிவிட்டேன். நீங்களும் ஒரு அதிபர் என்ற வகையில் உங்கள் பாடசாலைக்குள் வந்து யாரும் மாணவர்களை கலைக்காது பார்த்துக் கொண்டீர்களாம்... பாடசாலைக்கு வெளியே கண்டுகொள்ளாமல் இருந்து கொண்டீர்களாம்... வீட்டுக்கு வந்தபோது நான் என்ன செய்தேன் என்று கேட்டீர்கள்... அனைவரையும் கலைத்துவிட்டு நானும் வந்துவிட்டேன் என்றேன்... நீங்கள் எதுவே பேசவில்லை.... அந்த 7ஆம் வகுப்பிலேயே என்னுள் எரிய ஆரம்பித்த உரிமை வேண்டிய யாகத்தை எரிய நீங்கள் அனுமதித்தீர்கள்.... மறுநாள் என் காட்லி கல்லூரியில் வகுப்பை புறக்கணித்ததற்காக எங்களை ரண்டு கட்டி அடித்தது வேறுகதை... அப்போதே சோறா? சுதந்திரமா? என கையொழுத்துப்பிரசுரம் செய்து அண்டை அயலில் விநியோகித்தவன் நான்... ஒருவிதத்தில் தந்தையின் ஆசீர்வாதத்துடன் வளர்ந்த சிறுவர் போராளி நான்... என் உணர்வுகளுக்கு மதிப்பளித்தீர்கள் தந்தையே... சிறுவர்களுக்கும் உணர்வு இருக்கிறது. எனவே அவர்கள் பாதிப்பிற்கான தீர்வுகளை கொடுங்கள்... மாறாக சிறுவர் போராளி என அவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தாதீர்கள்...

நான் ஏழாம் தரத்தில் படித்த போது வடமாகாண பேச்சுப் போட்டி ஒன்றில் கலந்து கொள்ள நீங்கள் ஊக்குவித்து அதற்காக பயிற்சிகளையும் ஒருங்கமைத்து நானும் தயாராகி அழைப்பார்கள் என்றிருந்தால் எவ்வித கல்லூரிப் போட்டியையும் நடத்தாது இருவரை எனது காட்லி கல்லூரி அறிவிக்க நான் அழுதபடியே வந்து அதை உங்களிடம் சொல்லி அதிபரிடம் பேசுமாறு வேண்ட... இல்லை நீயே போய் பேசு உனது நீதிக்காக நீ தான் போராட வேண்டும் உன் அதிபர் ஆவன செய்வார் எனத் தைரியம் தந்து அனுப்ப மறுநாள் நானும் தயங்கித் தயங்கிச் சென்று அதிபர் சாமுவேலுடன் பேச அவரும் குறித்த ஆசிரியரை அழைத்து ஏன் அந்தத்;தவறு நடந்தது என வினாவி என்னை மூன்றாவது போட்டியாளராக இணைத்து விட்டதையும்.... பின்னர் வட்டாரத்திற்கான பேச்சுப்போட்டியில் நடுவர்களில் மூவரில் இருவர் என்னையே முதலாவதாக தெரிவு செய்ய மூன்றாவது நடுவர் முன்கூட்டிய வேறு தெரிவுகளுடன் அங்கிருந்து வழமைக்கு மாறாக புள்ளிகளைக் கூட்டி என்னை மூன்றாவது இடத்திற்கு மீண்டும் தள்ளிவிட எனக்கு பயிற்சி அளித்தவரை நீங்கள் அனுப்பி வைத்திருந்ததால் அவர் முடிவுகளுக்கு எதிராக உடன் முறையீடு செய்ய தவறு கண்டறியப்பட்டு மீண்டும் மூன்றாவது ஆளாக மாகாண போட்டிகளுக்கு அனுப்பப்பட வட மாகாணத்திற்கான போட்டியில் நான் முதற்பரிசான தங்கப்பதக்கத்தை வென்று வந்ததை என் பேசும் ஆற்றலை வளர்த்து விட்டது மட்டுமன்றி வெற்றிக்காக போராட வேண்டும் கடுமையாக போராட வேண்டும் பலவேளைகளில் பல அநீதிகளை துணிவுடன் எதிர்கொண்டு நின்றாலேயே அது சாத்தியம் என்ற வாழ்க்கைப்பாடத்தை எனக்குக் கற்றுத்தந்தது.... அதுவே இன்று என் இனம் சார்ந்த களத்தில் பல களங்களை வெல்வதற்கான தற்துணிவை எனக்குத் தந்தது.... வெற்றி பெற்று அதை தெரிவிக்க அதிபர் முன் சென்ற போது தான் அறிந்தேன் என்னை அனுப்பிய நீங்கள் எனக்குத் தெரியாமலே அன்று காலையே அதிபரை தொலைபேசியில் அழைத்து விடயத்தை அவரிடமும் பேசிவிட்டு நீங்கள் அழைத்ததை என்னிடம் சொல்லவேண்டாம் என்றீர்களாம்... அதிபரும் சொன்னார் உனக்கு நடந்த அநீதிகள் உனக்குள் வெற்றி பெறவேண்டும் என்ற வைராக்கியத்தை ஏற்படுத்தி வெற்றிவரை அழைத்துச் சென்றுவிட்டது. உன் வெற்றியூடாக உன் தந்தைக்கு மட்டுமல்ல கல்லூரிக்கும் பெருமை சேர்திருக்கிறாய்... அதேவேளை பலரின் முகங்களில் கரியையும் பூவசியுள்ளாய் என்றார்...

நன்றாக ஞாபகம் இருக்கிறது அதே 7ஆம் தரத்தில் இருந்தபோது உங்களை அதிபராக என் காட்லி கல்லூரிக்கு அனுப்ப முயல என்னிடம் வந்து கேட்டீர்கள் நான் சொன்னேன் ஒன்றில் அங்கு நீங்கள் இருக்கவேண்டும் அல்லது நான் இருக்க வேண்டும் என்று... நீங்களும் வரவில்லை... ஏன் நான் அப்படி அந்த சின்ன வயதிலேயே சொன்னேன் என்று உங்களுக்கு மட்டும் தான் தெரியும். நானும் என் சகோதரியும் வளரும் போதே சொல்லி வளர்த்தீர்கள் என் பிள்ளைகள் என்று எந்த வாய்ப்பையும் எதிர்பார்த்து நீங்கள் வளரக்கூடாது உங்கள் காலில் நின்றே வளரவேண்டும் என்றீர்கள்..... நாங்களும் என்றும் உங்கள் பெயரை தவறாக பயன்படுத்தியதில்லை.... அதனால் இன்றும் நான் உங்களின் பிள்ளை என பலருக்கு தெரியாது.... எங்களின் தந்தை என நீங்கள் அழைக்கப்படுவதையே விரும்பினீர்கள்.... ஆனால் எங்களின் தந்தை என உங்களை அழைப்பதிலேயே எங்களுக்கு என்றும் பெருமை தந்தையே....

முதலில் வட மாகாண விஞ்ஞான ஆசிரியர் சங்கத் தலைவராகவும் பின்னர் வடமாகாண ஆசிரியர் சங்கத் தலைவராவும் நீங்கள் ஆற்றிய சமூகப்பணி தொன்டைமனாற்றில் விஞ்ஞான வெளிகல நிலையத்தை மாணவர்களுக் வரபிரசாதமாக அமைத்தது வட்டராக் கல்வி அதிகாரியாக அதிபராக இருந்த இடங்களில் எல்லாம் எம் மக்களின் பேரன்பை சம்பாதித்தது.... அதிலும் சிங்களத்தில் ஒன்று தமிழில் ஒன்று என பாடசாலைகள் தெரிந்தெடுக்கப்பட்டு படிமுறை வளர்ச்சிப்பாடசாலைகள் என்ற ரீதியில் தமிழில் இடைக்காடு பாடசாலையை உயர்தர பாடசாலையாக மாற்றிய பணிக்காக அப்பகுதி மக்கள் இன்றும் உங்களை உளமாற நினைவு கூர்வதை பார்க்குமிடத்து பெருமையாக இருக்கிறது தந்தையே....

83 இனவழிப்பின் பின் மார்கழியில் தென்னாபிரிக்காவில் இருந்து ஊர் திரும்பீனீர்கள்... உங்களை அழைத்துச் செல்ல கொழும்பில் எந்தத் தமிழரும் இல்லாததால் உங்களுடன் வருபவர்களையும் அழைத்துச் செல்ல ஒழுங்குகளை செய்ய சொன்னீர்கள்... நாங்களும் அதற்கான வாகனத்துடன் வந்திருந்தோம்.... விமான நிலையத்தில் வேறும் சிலர் உதவி கேட்க அவர்களுக்கும் வாகன ஒழுங்கு செய்யச் சொன்னீர்கள்... நாங்கள் நீர்கொழும்பு சென்று வரப்பயந்த சிங்கள ஓட்டி ஒருவரை மீண்டும் வவுனியா வரை கொண்டுவந்துவிடுவதாக உறுதியளித்து சுட்டிவந்தோம்... இந்த வாகனத்தில் யாழ் வழியாக வந்தவர்களை இறக்கி அதற்கான பணத்தையும் அவர்களிடம் இருந்து பெற்று வந்தேன்... ஈற்றில் அந்த உதவி கோரிய தம்பதியை இறக்கியபோது தாம் உங்களிடம் கொடுத்துவிட்டதாக தெரவித்தனர்... எனக்கு சந்தேகம் இருந்தாலும் வீடு திரும்பியதும் அப்பா அவர்கள் பணம் உங்களிடம் தந்தார்களா? என்றேன்... என் என்றீர்கள் நடந்ததை சொன்னேன்... சிரித்துக் கொண்டு கோயில் கணக்கில் எழுதிவிடு என்றுவிட்டு நீங்கள் பணத்தைக் கொடுத்து வாகனத்தை அனுப்பிவைத்தீர்கள்... நட்டாற்றில் நின்றவர்களுக்கு இவ்வளவு பேருதவி செய்த பின்னும் முதுகில் குத்திவிட்டனரே என் எனக்கு பலநாள் கோபம்... என் இனத்தில் இவ்வாறானவர்களும் இருக்கிறார்கள் என நான் அன்று கற்ற வரலாற்றுப்பாடமே இன்றும் என் மீது சேறுவாரி வீசுபவர்களையும் கடந்து நகர முடிகிறது தந்தையே!

ஆடிக்கலவரத்தின் பின் திரும்பியபோது எங்களைச் சுற்றி அப்போது பலர் திராட்சை உற்பத்தியில் இருந்தனர். அதன் ஏற்றுமதி தடைப்பட்டுப்போகவே எங்கள் வீடுகளைத்தட்டி கிலோ 2 ரூபாய்க்கு விற்றனர். ஏன் திராட்சை ரசம் செய்யக்கூடாது என அவர்களிடம் சென்று பேசி தென்னாபிரிக்கா திரும்பியதும் 50 வயதுகடந்த அந்தவேளையிலும் உலகப் புகழ்பெற்ற தென்னாபிரிக்கா வைனான கேப் வைன் தயாரிப்பு பயிற்சி நெறியில் பதிவுசெய்த விடுமுறை காலங்களில் கேப் ரவுன் சென்று பயின்றீர்கள்... ஆனால் நாட்டில் தொடர்ந்து உருவான சூழலால் உங்கள் எதிர்பார்ப்பான வைன் உற்பத்தித் தொழிற்சாலை கைகூடாமல் போனது... கற்பதற்கு வயதில்லை... தேவை கருதி கற்கையும் அதன் தேவையும் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது என்று உங்களிடம் கற்றதை இன்றும் என் 50களிலும் தொடர்கிறேன் தந்தையே...

எவ்வளவோ பேசவேண்டும்... எனினும் உங்கள் நித்திய உறக்கத்தை அதிகம் குழப்பவிரும்வில்லை... இறுதியாக ஒன்று தந்தையே... என் குறித்த பல கனவுகள் உங்களுக்கு இருந்திருக்கும் அவை அனைத்தையும் நான் நிறைவேற்றவில்லை... என் பாதை வழியில் நிறையவே மாறிவிட்டது... சமூகத்திற்குள் புதைந்துவிட்டது... எனினும் மனிதனாகவும் மனிதத்துவத்துடனும்... எதோ வாழ்ந்தோம் என்றில்லாது வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடி வெறுமையாக எனக்கென்று மட்டும் வாழாது வாழும் வாழ்க்கை நிறையவே பிடித்திருகிறது தந்தையே... உங்களுக்கும் தான் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்...

ஒவ்வெரு குழந்தைக்குள்ளும் பல திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன... அவற்றறை புடம்போட்டு அதற்கு தடம் அமைத்து வெளிக்கொணர்வதிலேயே ஒவ்வொரு தந்தையும் வெற்றி பெறுகிறான்... என் அனுபவங்கள் உங்களுக்கும் உதவியாக இருந்தால் மகிழ்ச்சியே... அதேவேளை நீங்கள் உங்கள் தந்தையிடம் கற்ற பாடத்தையும் பகிர்ந்து கொண்டீர்களானால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்... இது என் தந்தையின் நினைவாக விரிக்கும் சமூகக்களம்...