Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மண்ணின் மைந்தர்கள்

மூத்த நடிகை - ஊடகவியலாளர் ரதி கோபாலசிங்கம்!

Tuesday 12th Sep 2017 23:16 PM

தீபன் கிருஷ்ணன்

நெஞ்சுக்கு பக்கத்தில் : மூத்த நடிகை - ஊடகவியலாளர் ரதி கோபாலசிங்கம்!
-------------------------------------------------------------------------------------------

ஆயிரம் திறமைகள் தங்கள் வசம் வைத்திருந்தாலும் அடக்கத்தோடு பின்னால் நிற்பவர்கள், எப்போதும் என் முன்னால் வந்து நிற்பார்கள். அப்படி நிறைந்த ஆளுமையைக் கொண்ட கலை வடிவம்தான் இந்தச் சகோதரி.

நான் TRT வானொலியின் நேயராக இருந்த காலத்தில் ரசிக்கின்ற பெண் குரல்களில் இவருடையதும் அடங்கும்.

பின் நாட்களில் அதே வானொலியில் நானும் அறிவிப்பாளராக அறிமுகமாகிய போது பக்குவப்பட்ட மூத்த பெண் ஊடகவியலாளராக அங்கே பணியாற்றினார்.

சிறந்த குரல் வளம் கொண்ட இவர் சிறந்த செய்தி வாசிப்பாளர். அத்தோடு பெண்கள் நேரம், உங்கள் விருப்பம், இசையும் கதையும், கவிதையும் கானமும் போன்ற பல நிகழ்ச்சிகளைத் திரன்படக் கலையார்வலர்களின் செவிகளுக்கு விருந்தாகப் படைத்தார்.

எந்தவொரு நிகழ்ச்சியைப் பொறுப்பெடுத்தாலும் கேட்போர் மனங்களைப் புரிந்து கொண்டவராய் அதற்கென்று அதிக நேரம் ஒதிக்கி. நீண்ட தேடல்களைத் தரமாகவும், மிகவும் இனிமையாகவும் தொகுத்தளிப்பதுதான் இவரது சிறப்பு.

நடிப்பு தொடர்பான நிகழ்ச்சிகளில் பாத்திரத்தை உணர்ந்து அம்மாவாக, சகோதரியாக, காதலியாக, ஏன் குழந்தையாகக் கூட மாறிவிடுவார். ஒலிப்பதிவு செய்யப்பட்ட இவரது நிகழ்ச்சிகள் பல இன்னும் என்னிடம் இருக்கின்றன.

இவர் நடித்த நாடகம் ஒன்று; அதை இன்று கேட்டாலும் கண்கள் ஈரமாகி விடும். அந்தளவுக்கு கவலைகளைப் பிழிந்திருந்தார்.

நேயர்கள் தொலைபேசி மூலம் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகளில் இவருக்கென்றே பெரும் ரசிகர்கள் கூட்டம் அலைபோன்று திரண்டு வருவது உண்டு. இவரது குரலை நேசிக்கும் அந்த ரசிகர்களின் பெயர்கள்கூட என் மனதில் இப்போதும் இருக்கிறது.

ஒரு நிகழ்ச்சிக்கு கட்டுரையோ, கதையோ, கவிதையோ வாசிக்க ஆரம்பித்தால், சீராக வாசித்து முடித்து விட்டுத்தான் நிமிர்ந்து பார்ப்பார். (நீண்ட வாசிப்பின் போது தொழில் நுட்பக் கலைஞர்கள் குட்டித் தூக்கம் கொள்ளலாம். எந்தப் பிழையும் நேராது என்ற நம்பிக்கையுடன்). இந்தச் சகோதரியின் பல நிகழ்ச்சிகளுக்கு தொழில் நுட்பத்தில் உதவி புரிந்திருக்கின்றேன் என்பதால், இப்படி நேரில் பார்த்த வியப்புக்கள் நிறைய உண்டு.

நேசித்த ஊடகத்திற்காக பொன்னான நேரத்தையும், உழைப்பையும் மட்டுமல்ல. பணத்தையும் முன்வந்து கொடுத்து உதவிய போதிலும். இவரது கலையாற்றல்களை முளுமையாக வெளிக்கொண்டு வருவதற்கு, அன்றைய நிர்வாகம் ஒத்துழையாதது வேதனையே!

கலைப் படைப்புகள் மட்டுமல்ல. சமூகப்பணிகளைக் கூட, தானாக முன்வந்து செய்யக் கூடிய தாராள மனம் படைத்தவர். பிரான்சில் வதிவிட உரிமை பெற்றுப் பலர் வசதி வாய்ப்புகளோடு இருப்பதற்குப் பல வழிகளில் இவர் உதவி புரிந்துள்ளார். இவை மட்டுமல்ல, இவரது சேவைகள் மிக நீண்டவை!

இவரைப் போன்ற பன்முக ஆற்றல் மிக்க கலைஞர்களை ஊடகங்கள் உள்வாங்கி வைத்திருப்பது. எங்கள் செவிகளுக்கும், விழிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து!

பின் குறிப்பு : இதைப் படித்ததும் ஏன் தம்பி இப்படி எழுதினீர்கள் என்று, இப்போதும் பத்து வருடத்திற்கு முந்தைய இனிமையான தன்னடக்கக் குரலால் சினப்பார்.