Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பேசிய ஊர்காவல்படை வீரர் செக்யூரிட்டி

Wednesday 19th Apr 2017 15:44 PM

தனியார் மருத்துவமனை ஒன்றில் செக்யூரிட்டியாக பணி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்

திருச்சியில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பேசிய ஊர்காவல்படை வீரர் தற்போது, தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக பணி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர்.

அப்போது சென்னை மெரீனாவில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அவர்களுக்கு ஆதரவாக மதியழகன் என்ற காவலர் ஆதரவு குரல் நீட்டினார். இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதைத் தொடர்ந்து திருச்சி மாணவர் போராட்டத்தின்போது, கொட்டும் மழையில் நனைந்தபடி பாதுகாப்பு பணிக்கு வந்த திருச்சி உறையூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் பெல்சன், உணர்ச்சி மிகுதியில் திடீரென போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக மைக் பிடித்து பேச ஆரம்பித்தார்.

அவரது பேச்சைக் கேட்டதும், ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும், பெல்சனை தூக்கி வைத்துக் கொண்டாடியதுடன், கட்டி அணைத்தும் ஆர்ப்பரித்தார்கள்.

ஆனால், ஊர்க்காவல்படை வீரர் பெல்சன், இப்படிப் பேசியதற்காக, கடந்த 3 மாதங்களாக அவருக்கு பணி ஏதும் வழங்காமல், திருச்சி காவல்துறை வஞ்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் செக்யூரிட்டியாக பணி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், அன்று மாணவர்கள் போராடியதைக் கண்டு, ஆர்வத்தில் பேசிவிட்டேன். இதைத் தொடர்ந்து தனக்கு டியூட்டியே போடவில்லை. இதனால் கமிஷ்னரைப் பார்த்து இது குறித்து கூறினேன்.

அதற்கு அவர் உன்னை யார் இப்படி பேசச் சொன்னார்கள், உன்னை கைது பண்ணாமல் விட்டாங்கள் என்று சந்தோசப்படு. அங்கே என்ன பேசினீர்கள் என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போ என்றார். அப்படியே விளக்கக் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன்.

ஆனாலும் வேலை கொடுக்கவில்லை. அடுத்து கலெக்டர், அமைச்சர் எனப் பலரிடமும் இதுகுறித்து மனுக்கொடுத்தேன். ஆனால் வேலை தரவில்லை.

நான் வேலைக்குச் சேரும்போது, 35ரூபாய் சம்பளம், தற்போது 150 ரூபாய் சம்பளம். இந்தச் சம்பளம் முக்கியமில்லை, அப்பா, தாத்தா நாட்டுக்காக உழைத்ததைப்போல, காக்கி சட்டைப் போட்டுக்கொண்டு என்னாலும் இந்த நாட்டுக்கு உதவ முடியுதே என்கிற மனநிறைவில் 16 வருடங்களாக உழைத்தேன்.

ஆனால் அதை பறித்துவிட்டார்களே என்று வருத்ததுடன் கூறியுள்ளார்.......