Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தரகர் சுகேஷ் சந்திரசேகர்

Tuesday 18th Apr 2017 22:11 PM

அவர் நடிகை ஒருவருடன் சேர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மிகப்பெரிய மோசடி லீலைகளில் ஈடுபட்டுள்ளார்.


 

 

அ.தி.மு.க. (அம்மா) கட்சி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் பதிவு செய்துள்ள லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தரகர் சுகேஷ் சந்திரசேகர் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 


அவர் நடிகை ஒருவருடன் சேர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மிகப்பெரிய மோசடி லீலைகளில் ஈடுபட்டுள்ளார்.

திடுக்கிடும் தகவல்கள்

இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதற்காக ரூ.50 கோடி லஞ்சப்பேரத்தில் ஈடுபட்டதாக, டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற தரகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் மீதும், அ.தி.மு.க. (அம்மா) கட்சி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீதும் டெல்லி போலீசார் லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். டி.டி.வி.தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்படுவார் என்ற பேச்சும் பரபரப்பாக எழுந்துள்ளது.

இந்த வழக்கில் கைதாகியுள்ள தரகர் சுகேஷ் சந்திரசேகர் பற்றி டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மோசடி மன்னன்

இவர் தமிழகத்தில் சென்னை உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில், மிகப்பெரிய மோசடி லீலைகளில் ஈடுபட்டுள்ளார். மோசடி மன்னனாகவே அவர் வலம் வந்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் அவருக்கு ஒவ்வொரு பெயர். அவரது உண்மையான பெயர் பாலாஜி. ஆனால், தமிழகத்தில் இவர் மோசடி மன்னனாக வலம் வந்த போது, தனது பெயரை சுகேஷ் சந்திரசேகர் என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் தற்போது தனது பெயரை சுகேஷ் சந்திரா என்று கூறியிருக்கிறார். அரசியல்வாதிகளின் உறவினர்களின் பெயரிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி என்ற போர்வையிலும், இவர் பெரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.

பட்டதாரி

பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் எம்.பி.ஏ. பட்டதாரி. ஆங்கிலம், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் இவர் சரளமாக பேசுவார். பல மொழிகளில் பேசும் திறமை இருந்ததால் மோசடி லீலைகளில் இவர் வெற்றிகரமாக வலம் வந்தார். சொகுசு கார்களில் செல்வார். இவர் செல்லும் கார்களில் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் சைரன் விளக்கு பொருத்தப்பட்டிருக்கும்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, மராட்டியம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் இவர் மீது மோசடி வழக்குகள் உள்ளது.

தமிழ்நாட்டில் மோசடி

தமிழ்நாட்டில் பிரபல பேரீச்சம்பழம் நிறுவனத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்டார். சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.19 கோடி மோசடி செய்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவரை கைது செய்தனர். இவரோடு வங்கி அதிகாரிகள் சிலரும் கைதானார்கள்.

சென்னையை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம், அவரது மகளுக்கு மருத்துவ கல்லூரியில், சீட்டு வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் அழகு நிலையம் ஒன்றில் முன்னாள் முதல்-அமைச்சரின் பேரன் என்று சொல்லி பல லட்சங்களை சுருட்டிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். மும்பையில் ஒரு நிதிநிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

நடிகையுடன் தொடர்பு

பிரபல மலையாள நடிகை லீனா மரியாபாலுடன் காதலில் ஈடுபட்டார். தனது மோசடி லீலைகளுக்கு நடிகை லீனாவையும் பயன்படுத்தியுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவரை கைது செய்தபோது நடிகை லீனாவும் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இரட்டை இலை சின்னம் வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) கட்சி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனையும், சுகேஷ் சந்திரசேகர் சிக்க வைத்துள்ளார். ஆனால், சுகேஷ் சந்திரசேகர் யார் என்பதே தனக்கு தெரியாது என்று, தன் மீதுள்ள குற்றச்சாட்டை டி.டி.வி.தினகரன் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.