Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

ஆதரவாளர்களிடையே ஆலோசனை கூட்டம் நடத்திய தீபா!

Wednesday 11th Jan 2017 06:53 AM

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர்,

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா ரோட்டையொட்டியுள்ள சிவஞானம் சாலையில் உள்ள தீபாவின் வீடடில் அவரை சந்திப்பதற்காக அ.தி.மு.க. தொண்டர்களும், பொது மக்களும் தினமும் கூட்டம் கூட்டமாக திரள்கிறார்கள். இளைஞர்கள், இளம் பெண்கள், வயதான மூதாட்டிகள் என வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினருமே தீபாவை சந்தித்து பேசுவதற்காக கூடுகிறார்கள்.

இப்படி வீட்டுக்கு வரும் தொண்டர்களை தீபாவின் கணவர் மாதவன் காலையில் சந்தித்து பேசி வருகிறார். மாலையில் தீபா தொண்டர்களை சந்தித்து சிறிது நேரம் அவர்களிடம் உரையாற்றுகிறார்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இது போன்று தொண்டர்களை சந்தித்து வரும் தீபா, கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தனது அரசியல் பயணம் எப்போது தொடங்கும் என்பதை வெளிப்படையாக அறிவித்தார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி அன்று எனது அரசியல் பயணம் தொடங்கும் என்று கூறி இருக்கும் தீபா, அன்று முக்கிய முடிவுகள் சிலவற்றையும் அதிரடியாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ள தீபா, அந்த பயணம் எப்படி இருக்கும்? என்பதை கூறவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினரே இதனை தொடங்கி கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். தீபாவை அரசியலுக்கு அழைத்து விதவிதமான பேனர்களையும் அவர்கள் வைத்து வருகிறார்கள். அதில் “இளைய புரட்சித் தலைவியே”, “வருங்கால முதல்வரே”, “அம்மா வழியில் வழி நடத்த வாருங்கள்” என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பேரவையை தீபா அங்கீகரித்து அதற்கு தலைமை தாங்குவாரா? அல்லது எம்.ஜி.ஆர். ஜெயலலிதா பெயருடன் தனிக்கட்சியை தொடங்குவாரா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தனது அரசியல் பயணம் மிகுந்த எப்படி? இருக்கும் என்பதை தீபா தெளிவாக அறிவிக்காத நிலையிலும், 17-ந்தேதி அவர் தொடங்க இருக்கும் அரசியல் பயணம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகம் முழுவதும் தீபா ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், அதுபோன்ற கூட்டம் சென்னையில் மட்டும் நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று சென்னையில் தீபா ஆதரவாளர்கள் முதல் முறையாக கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். சென்னை நங்கநல்லூரில் உள்ள கே.சி.டி. திருமண மண்டபத்தில் மாலையில் இந்த கூட்டம் நடக்கிறது. இதில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தீபாவின் ஆதரவாளர்களும், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

இன்று நடைபெறும் கூட்டத்தில் தீபாவின் அரசியல் பயணம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.

வெளி மாவட்டங்களில் மட்டுமே தீபாவின் ஆதரவாளர்கள் கூட்டம் நடத்தி வந்த நிலையில், சென்னையிலும் அவருக்கு ஆதரவாக கூட்டம் நடத்தப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.